இன்று நமக்குக் கிடைக்கும் தமிழ் இலக்கிய வரலாறே ஒரு புதுமையான நவீன புதினம் போல் காணப்படுகிறது. பிற மொழி இலக்கிய வரலாறு போல் இல்லை. தொடக்கம் புலப்படவில்லை. நன்கு வளர்ந்து முதிர்ந்த ஒரு மொழியின் இலக்கணத்தைக் கூறும் மொழியியல் அதிசயமாய்த் தொல்காப்பியம் திடீரெனத் தோன்றுகிறது. அதன் பின் விளைவதெல்லாம் மயக்கும் மாயவித்தை போல் இருக்கிறது. தமிழ் வானில் பதினெட்டு நட்சத்திர மணடலங்கள் தோன்றுகின்றன. அவற்றில் ஆயிரக் கணக்கான நட்சத்திரப் பூக்கள் மின்னுகின்றன. இவற்றை சங்க இலக்கியம் என்று கூறுகிறார்கள். முத்து முத்தாக எத்தனை கவிதைகள்.
தாமரைத்
தண் தாது ஊதி மீமிசைச் சாந்தில்
தொடுத்த தீம் தேன் போல (நற்றிணை1)
தாமரை மலர்களில் தேனை எடுத்து சந்தன மரத்தின் உச்சியில் தேனீக்கள் கூடு கட்டுவது போல சங்கத் தமிழ்ப் புலவர்கள் இயல்பான வாழ்க்கை நிகழ்வுகளில் சேகரித்த இணையற்ற நாடகங்களைப் பலநூறு பாடல்களாகப் பாடியுள்ளனர்.
இந்த வியப்பு அடங்குவதற்குள் அடுத்த அதிசயமாகச் சிலப்பதிகாரம் என்ற நவீன காப்பியம் பிறக்கிறது. அரசர்களைக் கைவிட்டு விட்டு சாமானியர்களைக் காப்பியத் தலைவர்கள் ஆக்குகிறது. நீதி பிறழ்ந்த மன்னனை மாய்த்தும் அவன் ஆண்ட நிலத்தை எரித்தும் கணவனை இழந்த ஒரு சிறுபெண் முதன் முதலில் கலகத்தமிழை அரங்கேற்றுகிறாள். வடிவமைப்பிலும் கதையமைப்பிலும் ஒரு நவீன முத்தமிழ் நாடகம். கவிதையில் ஒரு கற்கண்டுப் புதினம். இதன் புதுமையையும் நுட்பங்களையும் முறியடிக்கும் விதத்தில் ஒரு காப்பியம் உலக அளவில் இன்றளவும் தோன்றவில்லை என்றே கூறலாம்.
அடுத்து பல காப்பியங்கள் தோன்றினாலும் ஆயிரம் காலத்துக்குப் பின் காப்பியம் பாடுவதற்கென்றே பிறந்த கம்பன் கற்பனையில் ஓர் அற்புதத்தை விளைவிக்கிறான். தமிழ் இவனில் இனிமை பெறுகிறது. கன்னித் தமிழுக்கு கற்பனைச் சிறகுகளைப் பூட்டுகிறான். இமய மலை உயரத்துக்கு இலக்கியச் சின்னத்தை அமைக்கிறான். இவன் நிலத்துக்கு வந்த நித்திலச் சூரியன். வெய்யோன் ஒளியையும் தன் மேனியில் இருந்து எழும் ஒளியால் மறைத்த கம்பன் காவியத்துக்கு ஈடாக ஒரு தமிழ்க் காவியத்தைப் படைக்க நாம் ஒரு நூறு காப்பியங்களையாவது படைத்துப் பார்க்க வேண்டும். அந்த வகையில் ஒரு சிறு முயற்சியே இளம்நிலவனின் மகாகாவியம்.
கம்பனுக்குப் பின் தமிழில் தோன்றிய காவியங்கள் பலவும் குறுங்காப்பிய வகையைச் சார்ந்தவையாகும். பாரதி, பாவேந்தர், தமிழ் ஒளி, கண்ணதாசன், கம்பதாசன், ச.து.சு. யோகி, முடியரசன், வாணிதாசன், கா.மு.ஷெரிப், நா. காமராசன், பெருஞ்சித்திரனார், வைரமுத்து, நாமக்கல் கவிஞர், புலவர் குழந்தை, ஞானி, ஈழத்து மகாகவி போன்ற பல தலைசிறந்த கவிஞர்களின் சிறு காவியங்கள் இனிமையும் எளிமையும் நிறைந்தவையாகும்.[1] ஆனால் நாம் இங்கு பெருங்காப்பியங்களையே கணக்கில் எடுத்துக்கொள்கிறோம். புராணங்களைக் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. தலைவர்களைப் பற்றி பாடிய நீண்ட பாடல்கள் வாழ்க்கை வரலாற்று ஓவியங்களே. இந்த வகையில் அளவிலும் பாடுபொருளிலும் தனித்துவம் வாய்ந்ததாக பின்வரும் காவியங்களைக் குறிப்பிடலாம்:
கவியோகி சுத்தானந்த பாரதியின் பாரத சக்தி மகாகாவியம் 5 காண்டங்களையும் 50000 அடிகளையும் கொண்ட மாபெரும் படைப்பு. இந்நூலுக்கு அண்ணல் காந்தி அடிகள், அன்னிபெசண்ட் அம்மையார், சுவாமி சிவானந்தர், ஸ்ரீலஸ்ரீ பன்றிமலை சுவாமிகள், வங்கக் கவிஞர் இரவீந்திரநாத் தாகூர், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, நாமக்கல் வெ.இராமலிங்கம் பிள்ளை, நவநீத கிருட்டிண பாரதியார், மட்டக்களப்பு மகாகவி, மகா மகோபாத்யாய உ.வே. சாமிநாதையர், திரு.வி. கல்யாண சுந்தரனார் முதலிய சான்றோர்கள் பாராட்டுரையும் டாக்டர் மு.வரதராசனார் சிறப்புப் பாயிரமும் அளித்துள்ளனர். தெளிந்த தமிழ்நடையும், திகட்டாத கருத்துகளையும் வாரிவழங்கும் இந்த மாபெரும் படைப்பை வழக்கம்போல் தமிழுலகம் உச்சிமோந்து போற்றுவதாகத் தெரியவில்லை.
புலவர் குழந்தையின் இராவண காவியம் – இராவண காவியம் மொத்தம் ஐந்து காண்டங்களையும் 3,100 பாடல்களையும் 57 படலங்களையும் கொண்டுள்ளது. மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்குப் படைத்த இராமாயணத்திற்கு எதிர் இலக்கியமாக அமைந்த இந்தப் பெருங்காப்பியத்தை எழுதத் துணிந்த கவிஞரைப் பாராட்டியே தீர வேண்டும். விவிலியக் கருத்துகளை விமரிசித்து ஆங்கிலத்தில் பலநூறு படைப்புகள் வெளிவந்துள்ளன. ஆனால் தமிழ்ச் சூழலில் இது ஒரு புரட்சியும் புதுமையும் ஆகும். இது பகுத்தறிவாளர்கள் மத்தியில் பெரிதும் பாராட்டப்பட்டாலும் பொது இலக்கிய உலகில் இதன் வரவேற்பு அதிக அளவில் இல்லை என்பது நிதரிசனமான உண்மையாகும். அடுத்து, பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன் எழுதிய சேதுகாவியம் . தலைமுறைக் காண்டம், இயற்கை வியப்பார் எழுச்சிக் காண்டம் உள்ளிட்ட பல பகுதிகளைக் கொண்டது. தமிழ் மொழியின் பெருமை, இயற்கை வளம் மற்றும் மனித வாழ்க்கையின் மேம்பாட்டை கவிதை வடிவில் விளக்குகிறது.
பல நூறு குறுங்காவியங்களும் ஒரு சில பெருங்காப்பியங்களும் தற்காலத் தமிழில் தோன்றி இருந்தாலும் இவற்றில் எல்லாம் கதைப்பின்னலிலும் கருத்துகளை நிலைநிறுத்துவதிலும் புதிய உத்திகளும் நவீன பாணிகளும் பின்பற்றப்படவில்லை என்பது எதார்த்தம். ஒட்டுமொத்தத்தில் நவீன தமிழ்ப் புதினங்களில் நடைபெற்ற பரிசோதனைகளும் புதுப்புது உத்திகளை தழுவுதலும் தமிழ்க் காப்பிய இலக்கியத்தில் நடைபெறவில்லை. கவிதை நடையில் கதைகளைக் கூறும் முயற்சிகளே என்று பொதுவாகக் கூறலாம். தமிழில் புதுப்புது காவியங்கள் தோன்ற வேண்டுமானால் உலகளாவிய கதைகளும் உத்திகளும் கருத்துகளும் உள்ளீர்க்கப்பட வேண்டும். காவிய இலக்கியத்தைப் புதினங்களைப் போல நவீனப்படுத்த வேண்டும். அப்படியும் தமிழ் வாசகர்கள் படிப்பார்களா என்ற கேள்விக்கு பதில் கூறமுடியாது. பழந்தமிழ் இலக்கியங்களையும் சிறந்த நவீன படைப்புகளையும் (பொழுதுபோக்குக்கான நவீனக் குப்பைகளை இதில் சேர்க்கவில்லை) எத்தனை தமிழர்கள் படித்தார்கள் என்ற கேள்விக்குள் இதன் பதில் அடங்கி இருக்கலாம்.
இளம்நிலவனின் மகாகாவியம் வாசகர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காகவும், சிரமத்தைக் குறைப்பதற்காகவும், ஆர்வத்தை உருவாக்குவதற்காகவும் துணிந்து காப்பிய மரபுகளை மீறி புதினங்களைப் பின்பற்றி சில நவீன உத்திகளைப் பயன்படுத்துகிறது.
காவிய நடை: பொதுவாகக் காப்பியங்கள் பயன்படுத்தும் செய்யுள்/கவிதை நடை உயர்வானவைகளாகவும் உட்சாரம் நிரம்பியவைகளாகவும் தனித்தமிழல் ஆனவைகளாகவும் இருந்தாலும் பொதுவான வாசகர்களுக்கு ஓர் ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது.
பாழி டத்தினிற் பரந்ததோர் பம்பர வியக்கம்:
யாழி சைதரும் அகரத்தால் அம்பரம் விழிக்க,
வாழி சைதரும் உகரத்தால் வளர்தரும் அணுக்கள்
சூழி சைதரும் மகரத்தாற் சுழன்றன விரைந்தே
(பாரத மகாசக்தி காவியம், சித்தி காண்டம், சிருட்டி படலம் அடிகள் 65-68).
இது ஒரு மிகச் சிறந்த செய்யுள் கட்டமைப்பு. கோல் கொண்டு அளந்து கட்டிய யாப்பு. உயர்தனிச் செந்தமிழ் நடை கொண்டது. மகா ஞானியான யோகியின் இசைநுணுக்கம் பொதிந்தது. பேரறிஞரான கவிஞரின் மொழிப் புலமை பொங்கித் ததும்புவது. இதைப் புரிந்துகொள்ள சிறந்த இலக்கிய அறிவு தேவை. தமிழ் கற்றவர்களும் நன்கு புரிந்து கொள்ள இதற்கு உரை தேவை. இது இருபதாம் நூற்றாண்டில் பாடப்பட்டதுதான்.
ஆயிரங் கல்லி நகன்ற பரப்ப
தாயய னாட ரவாவுற, நீங்கிப்
போயவ ரேங்கப் பொலிவுறு செல்வம்
தாயது பண்டக சாலையை மானும்
(இராவண காவியம், தமிழகக் காண்டம், தமிழகப் படலம் 7)
புலவர் குழந்தையின் இந்த நடை கம்பனின் நடையைப் போன்றது. உரை இல்லாமல் தமிழ் படித்தவனும் புரிந்துகொள்ளுதல் கடினம். இது சீரிய செந்தமிழ் நடை. புலவோர் போற்றும் நடை. இதுவும் இருபதாம் நூற்றாண்டில் பாடப்பட்டதுதான்.காவியம் என்றாலே புலவர்களும், தமிழ் அறிஞர்களும் இத்தகைய நடையையே விரும்பிப் பாராட்டுவார்கள்.
ஆனால் பாரதியும் பாவேந்தரும் இந்தப் பழந்தமிழ் நடையைத் தளர்த்தி விட்டனர்.
நன்றி கெட்ட விதுரா, சிறிதும்
நாண மற்ற விதுரா,
தின்ற உப்பினுக்கே நாசந்
தேடுகின்ற விதுரா,
அன்று தொட்டு நீயும் எங்கள்
அழிவு நாடுகின்றாய்;
மன்றி லுன்னை வைத்தான் எந்தை
மதியை என்னு ரைப்பேன்! (பாஞ்சாலி சபதம்)
பண்டைய தமிழை இன்றைய துள்ளல் தமிழ் ஆக்கிவிட்டான் ஒப்புயர்வற்ற பாரதி. அதிலும் இணையற்ற தன் காப்பியத்தில். இதைப் படிக்கவும் புரிந்துகொள்ளவும் பல்கலைக் கழகத்துக்குச் சென்று படிக்க வேண்டியதில்லை.
சீர்மிகுத்த கதிர்நாட்டின் மேலே, அந்தத்
திறல்மிகுத்த வேழநாட் டுப்ப டைகள்,
போர்தொடுக்கப் பாய்ந்தனவாம் கடலைப் போலே!
பொன்னொளியைப் பாய்ச்சுகின்ற தேர்ப்ப டைகள்,
கார்மிகுத்தாற் போலேயா னைப்ப டைகள்,
கழுத்துமயிர் ஆடுகுதி ரைப்ப டைகள்,
நேர்மிகுத்த வில், வேல், வாள் துாக்கி வந்த
நெடியகா லாட்படைகள் இவை யாவும்,
(பாண்டியன் பரிசு)
பாவேந்தர் பாரதிதாசனின் காவியக் கவிதை நடை இது. இருபதாம் நூற்றாண்டில் இந்த நடைதான் தேவைப்பட்டது. இந்தச் செந்தமிழ்ப் பாவலர்கள் இருவரும் ஒரு பெருங்காவியம் பாடாதது தமிழுக்குப் பெரும் இழப்பே.
[1] இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்க் காப்பிய மரபில் தமிழ்ஒளி – வீ அரசு (கீற்று)
ஜேஆர்