இருபத்தொன்றாம் நூற்றாண்டில் காவிய இலக்கியங்களின் வளர்ச்சி

காப்பியம் என்ற இலக்கிய வடிவம் செத்துவிட்டது என்று ஒருபுறமும் பழங்கால காப்பியம் என்பதுதான் தற்காலத்தில் மாபெரும் புதினங்களாகத் தோன்றுகின்றன என்று மறுபுறமும் வாதங்கள் நடைபெற்றாலும்  இரண்டு வாதங்களும் பிழையானவையே. புதினம் என்ற ஓர் இலக்கிய வடிவம் காப்பியம் என்று இலக்கிய வடிவத்தைப் பதிலீடு செய்யாது, செய்ய முடியாது என்பதையும் அவை இரண்டும் வெவ்வேறு இலக்கிய வடிவங்கள் என்பதையும் முன்னர் கண்டோம். இருபத்தொன்றாம் நூற்றாண்டில் மட்டும் 2025 ஆம் ஆண்டு வரை பல்வேறு மொழிகளில்  பதின்மூன்றுக்கும் மேற்பட்ட காவியங்கள் தோன்றிவிட்டன என்பதை புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இவை அனைத்துமே கவிதை வடிவில் எழுதப்பட்ட காவியங்கள் அல்லவென்றாலும் கீழ்க்காணும் பத்து படைப்புகளைக் கவிதை வடிவில் எழுதப்பட்ட காவிய இலக்கியங்கள் என்று ஒப்புக்கொள்ளலாம்:

  1. ஸ்ரீபார்கவராகவீயம், ஜகத்குரு ராம்பத்ராச்சாரியார், வடமொழி, 2002
  2. லைம்ஸ்டோன்: அன் எப்பிக் போயம் ஆஃப் பார்படோஸ்– அந்தனி கெல்மன், ஆங்கிலம், 2008
  3. அஷ்தவக்ரா, ஜகத்குரு ராம்பத்ராச்சாரியார், இந்தி, 2009
  4. கீதராமாயணம், ஜகத்குரு ராம்பத்ராச்சாரியார், வடமொழி, 2010
  5. தி லோவிஸ் டிரைலஜி, ஆனி வால்ட்மன், ஆங்கிலம், 2011
  6. பிராண்ட் நியூ ஏன்சியன்ட்ஸ், கே டெம்பஸ்ட், ஆங்கிலம், 2013
  7. அப்போகேலிப்ஸ், பிரட்ரிக் டர்னர், ஆங்கிலம், 2016
  8. விரத நெப்போ விரத, போரிஸ் நோவிக், ஸ்லோவிக், 2017
  9. எப்போக்: எ பொயட்டிக் சை-பி சாகா, தேவ் ஜில்க், ஆங்கிலம், 2024
  10. எப்போக்: 1517. மிஷேலும் டயனாவும், ஸ்டானிஸ்லேவ் செர்னிஷெவிச், ரஷ்யமொழி, 2025

இவற்றைப் பற்றிய திறனாய்வுக்குள் நாம் செல்ல வேண்டியதில்லை. மிஷேலும் டயனாவும் என்ற ரஷ்யக் காவியம் ஐரோப்பியமொழிக் காவியங்களில் மிக நீளமானது என்றும் மிக நுட்பமான மொழியியல் சிறப்பு வாய்ந்தது என்றும் புகழப்படுகிறது. ஆங்கிலத்தில் தற்போது எழுதப்படும் சில காவியங்கள் அறிவியல் நுட்பங்களை அடிப்படையாகக் கொண்டவையாகும். இருபத்தொன்றாம் நூற்றாண்டிலும் காவிய முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என்பது மகிழ்ச்சியான செய்தியாகும். தமிழில் இருபதாம் நூற்றாண்டில் அதிக அளவில் காவிய முயற்சிகள் நடைபெற்றன. இருபத்தொன்றாம் நூற்றாண்டிலும் பல காண்டங்களைக் கொண்ட பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமனின் சேதுகாப்பியம் போன்ற சில முயற்சிகள் நடைபெற்றன. இப்போதும் நடைபெற்று வரலாம். ஒரு மகா காவியத்தைப் படைக்க குறைந்தபட்சம் இருபது ஆண்டுகள் வரை தேவைப்படலாம்.

தமிழில் புதினங்கள், சிறுகதைகள் போன்ற நவீன  வடிவங்களைத் தவிர்த்து கவிதை சார்ந்த புதிய படைப்புகளையும் முயற்சிகளையும் பற்றி இணைய வழியில் குறைந்த அளவிலேயே அறிந்துகொள்ள முடிகிறது. இருபத்தொன்றாம் நூற்றாண்டில் அத்தகைய முயற்சிகள் அரிதாகவே உள்ளன. அதற்கான ஆக்கமும் ஊக்கமும் இல்லை என்பது எதிர்பார்க்கக்கூடிய எதார்த்தமே.

ஜே.ஆர்

Leave a comment

Blog at WordPress.com.

Up ↑