இன்றைக் கிழித்து எழும் ஒளிநிலவு
ஏங்கவைக்கும் ஆங்கில இலக்கிய வரலாறு
தமிழ் இலக்கியத்தின் மேல் ஆராக் காதல்கொண்ட எனக்கு ஆங்கில இலக்கிய வரலாற்றைப் படிக்கும் போதெல்லாம் ஓர் இனிய பொறாமை ஏற்படும். கிறிஸ்துவுக்குப் பின் ஐந்தாம் ஆறாம் நூற்றாண்டுகளில்தான் இன்று நாம் இங்கிலாந்து என்று கூறும் நிலப்பரப்பை ஆங்கிலோ சாக்ஷன்கள் கைப்பற்றினர். ஏழாம் நுற்றாண்டில்தான் கிறித்துவ ஊழியர்கள் அவர்களுக்கு எழுதப்படிக்கக் கற்றுக் கொடுத்தனர். இந்தக் காலகட்டத்தில் செட்மன், பீட் ஆகியோர் எழுதத் தொடங்கினர். பியோவுல்ஃப் என்ற காப்பியம்பாடப்பட்டது. நாம் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே எழுதக் கற்றுக்கொண்டுவிட்டோம். நிறைய இலக்கியங்களை எழுதினோம். ஆனால் இன்று இருபத்தொறாம் நூற்றாண்டில் ஆங்கிலம் நம்மை விட ஒரு நூறாண்டுக்கு முன் சென்று விட்டது.
வேளாண் யுகத்திலேயே இலக்கியத்தில் கால்பதிக்கத் தொடங்கிய இவர்கள் எண்ணற்ற அற்புதமான இலக்கியங்களை வடிக்கத் தொடங்கிவிட்டனர். கிறிஸ்துவுக்குப் பின் பதினான்காம் நூற்றாண்டில்தான் ஆங்கில இலக்கியத்தின் தந்தை என்று போற்றப்படும் மொழியால் மனதை மயக்கும் வித்தகனான ஜெஃப்ரி சாசர் (Geoffrey Chaucer, 1342/43 – 1400) களத்தில் குதித்து கேன்டர்பரி கதைகளை (The Canterbury Tales) கூறத் தொடங்குகிறான். பின்னர் அங்கு வெடித்ததை ஓர் இலக்கியப் புரட்சி எனலாம். எட்மண்ட் ஸ்பென்சர், வில்லியம் ஷேக்ஸ்பியர், ஜான் டான், ஜான் மில்ட்டன், ஜான் டிரைடன், ஜோனத்தான் ஸ்விஃப்ட், அலக்சாந்தர் போப், சாமுவேல் ஜான்சன், வில்லியம் வேர்ட்ஸ்வொர்த், ஜேன் ஆஸ்டின், ஜான் கீட்ஸ், லார்டு பைரன், சார்லஸ் டிக்கன்ஸ், ஜார்ஜ் எலியட், தாமஸ் ஹார்டி, ஈட்ஸ், விர்ஜீனியா ஊல்ஃப், ஜேம்ஸ் ஜாய்ஸ், டி.எஸ். எலியட், ஜார்ஜ் ஆர்வல், சாமுவேல் பக்கட், வால்ட் விட்மன் . எத்தனை எத்தனை படைப்பாளிகள்! வானத்தில் உயரே சென்று வெடிக்கும் ஒரு வண்ண மத்தாப்பைப் போல எத்தனை வகையான கவிஞர்கள், உரைநடை விற்பன்னர்கள், ஆராய்ச்சி மேதைகள், புனைகதை ஆசிரியர்கள்! அன்று வெடித்துச் சிதறி விரிந்து பரந்து கொண்டிருந்த அறிவுலகில் பொங்கி வழிந்த அறிவு வெள்ளத்தை வாரிக் குடித்து இவர்கள் ஆங்கில மொழியையும் இலக்கியத்தையும் அளந்தறிய முடியாத சிகரத்தின் உச்சியில் கொண்டு சேர்த்துவிட்டனர்.
ஆங்கிலம் பிறந்து வளர்ந்து வான் விளிம்பை நோக்கி உயர்ந்து கொண்டிருந்த போது
ஓங்கலிடை வந்து உயர்ந்தோர் தொழ விளங்கி
ஏங்கொலிநீர் ஞாலத்(து) இருளகற்றும் – ஆங்கவற்றுள்
மின்னேர் தனியாழி வெங்கதிரொன்(று) ஏனையது
தன்னேர் இலாத தமிழைத்
தாய்மொழியாகக் கொண்ட நாம் அடிமை இருளுக்குள் அடைபட்டுக் கிடந்தோம். இந்தக் கால கட்டத்தில் தமிழில் உலகத் தரம் வாய்ந்த கம்பன் என்ற ஒரே ஒரு கவிஞன்தான் தோன்றினான். அன்று உலகில் தோன்றி ஒளிவீசிக் கொண்டிருந்த அறிவியல் அறிவும் பல் துறை அறிவும் நமக்குக் கிடைக்கவில்லை. ஆனாலும் தமிழ் வறுமையில் வாடிய கவிஞர்களின் நாவின் மூலம் தப்பிப் பிழைத்து இருபதாம் நூற்றாண்டுக்குள் நுழைந்தது. அப்போதே ஆங்கிலம் நம்மைவிட ஒரு நூறு மடங்கு உயரத்திற்கு வளர்ந்துவிட்டது.மொழிப் போட்டியில் ஆங்கிலம் தூங்காத முயல்! நாமோ பரிதாபத்திற்குரிய புலவர்கள் தூக்க முடியாமல் சுமந்துகொண்டு வந்த ஆமை.
புதிய தமிழ் எழுச்சி
ஆயினும் பின்னர் நடந்த அதிசயத்தை புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் இப்படிப் பாடுகிறார்:
பைந்தமிழ்த் தேர்ப்பாகன், அவனொரு
செந்தமிழ்த் தேனீ, சிந்துக்குத் தந்தை!
குவிக்கும் கவிதைக் குயில் இந்நாட்டினைக்
கவிழ்க்கும் பகையைக் கவிழ்க்கும் கவிமுரசு.
நீடு துயில்நீக்கப் பாடிவந்த நிலா
காடு கமழும் கற்பூரச் சொற்கோ
கற்பனை ஊற்றாம் கதையின் புதையல்
திறம்பாட வந்த மறவன், புதிய
அறம்பாட வந்த அறிஞன், நாட்டிற்
படரும் சாதிப் படைக்கு மருந்து
மண்டும் மதங்கள் அண்டா நெருப்பவன்
அயலார் எதிர்ப்புக் கணையா விளக்கவன்
என்னென்று சொல்வேன் என்னென்று சொல்வேன்
தமிழால் பாரதி தகுதி பெற்றதும்
தமிழ்பாரதியால் தகுதி பெற்றதும்
தமிழ் இலக்கிய வரலாற்றில் ஓர் எதிர்பாராத திருப்பம். இன்னும் தெளியாத வண்ணக் கனவு.சிற்றிலக்கிய ஓடைகளை மறித்து நின்ற பேரிலக்கியப் பெருங்கடல். கம்பனுக்குப் பின் ஓர் ஆயிரம் ஆண்டு உறக்கத்தைக் கலைத்த கவிதைக் குயில். அதன் பின் தமிழில் புதுக் கவிதையின் பிரவாகம் தொடங்கியது. புனை கதைகள் புத்தெழுச்சியுடன் எட்டா உயரங்களை எட்டிப்பிடிக்கத் தொடங்கின. புதினமும் சிறுகதையும் தன்னுணர்ச்சிப் பாக்களும், புதுக்கவிதையும் புதிய எல்லைகளை வகுக்கத் தொடங்கின.
எனினும் கம்பனுக்குப் பின் ஒரு மகா காவியம் எழவில்லை. கவிதைதான் தமிழின் உயிர்த்துடிப்பு. கவிதையாகப் பிறந்து கவிதையாக வளர்ந்து கவிதையாக வாழ்ந்து வரும் கன்னித் தமிழில் நம்மால் ஏன் இன்னும் பல நூற்றண்டுகளாக ஒரு மகா காவியத்தைப் படைக்க முடியவில்லை என்ற சிந்தனையின் தூண்டுதலால் அப்படிப்பட்ட ஒரு காவியத்தைப் படைக்க இளங்கவிஞர்களைத் தூண்டும் ஒரு முயற்சிப் பொறியே தன் காவியம் என்று கவிஞர் பிரகடனம் செய்கிறார். இளம் தமிழ்க் கவிஞர்கள் இந்தச் சவாலை ஏற்பார்களா?
ஜேஆர்
Leave a comment