வைரமுத்து – வாழும்போதே வைரமானவன்

‘வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு’ என்று மகாகவிஞர்களுக்கு எல்லாம் மகாகவியான பாரதியால் போற்றப்பட்ட நம் தாய்த்திருநாடு இன்னும் உலக உச்சமாம் நோபல் பரிசை வெல்லவில்லையே என்ற ஏக்கம் தமிழ் மேல் காதல் கொண்ட அனைவருக்குமே உண்டு!

ஆனால் ஓரளவுக்கு ஆறுதல் தரும் விதமாக ஒருமுறை அகிலனும் (1975) மறுமுறை ஜெயகாந்தனும் (2002) இம்முறை வைரமுத்துவும் (2026) குறைந்தபட்சம் இந்திய உச்சத்தைத் தொட்டு தமிழுக்குப் பெருமை சேர்த்திருக்கிறார்கள்.

மொழி அழகு – செந்தமிழாயின்

அதுவன்றோ அழகு

என்று ’எல்லா மொழியும் அழகுதான், தாய்மொழியோ கூடுதல் அழகு’ என மொழி குறித்தப் பார்வையில் தன் பரந்த நோக்கைப் பதிவுசெய்த கவிப்பேரரசு இந்தியா வழங்கிய இந்த விருதை ஒட்டுமொத்தத் தமிழ்ச் சமுதாயத்துக்கும் பொருத்தமாக அர்ப்பணித்து தமிழ் அன்னையின் மீது பன்னீர் தெளித்து அவளது மனதைக் குளிர்வித்து அவளது பூமுகத்தில் புன்சிரிப்பைத் தவழவிட்டிருக்கிறார்.

கவிப்பேரரசு ஒவ்வொரு சொல்லுக்கும் ஒவ்வொரு வரிக்கும் வர்ணமேற்றும் வல்லமை கொண்டவர். மேற்கோளாகக் காட்டக்கூடிய ஆயிரக் கணக்கான கவிதை வரிகளைப் பெற்றெடுத்தவர். வாழும்போதே தன் வரலாற்றை எழுதிக்கொண்டே செல்லும் வரம் பெற்றவர். அதனால்தான் ஒரு கவிஞர் இப்படிப் பாராட்டுகிறார்:

கற்கும்போதே கல்வியானவன்!

வாழும்போதே வைரமானவன்!

மாணவராகக் கல்லூரியில் படிக்கும் போதே அவரது கவிதை நூல் பாடமாக வைக்கப்பட்ட வியப்பான வரலாற்றைதான் ஒரு கவிஞன் இப்படிப் பாடுகிறான்!

தமிழ்ச் சமுதாயத்தின் ஒற்றுமை அற்ற சீர்குலைவைக் கண்டு கவிஞர் மனம் வெம்பிப் பாடுகிறார்:

மத சாதியால் பிரிந்துவிட்டோம்! – மனம்

அதைச் சகதியால் நிரப்பி விட்டோம்!

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன் ஆகுல நீர பிற (குறள் 34) என்ற வள்ளுவரின் வாய்ப்பாட்டையே இதற்குத் தீர்வாகக் கவிஞர் வலியுறுத்துகிறார்.

மனம் அழகு – எனின்

யாவும் பேரழகு!

இவரது சிந்தனைகள் அறிவுநலம் அளிப்பதாகவும் முருகியல் இன்பம் ஊட்டுவதாகவும் பிரமிப்பை ஏற்படுத்துவதாகவும் இருக்கும்: பின்வரும் கவிதை இதற்கு ஒரு சான்று:

மண்ணின் பொறுமைதான்

மலை

கரியின் பொறுமைதான்

வைரம்

தாயின் பொறுமைதான்

நீ

திகைக்கவைக்கும் சிந்தனை! தித்திக்கும் கருத்து! கவிப்பேரரசு வைரமுத்தே! தமிழின் பெருமைதான் நீ!

எளிய வார்த்தைகளாலும் வரிகளாலும் அரிய உண்மைகளை எளிமையாகக் கூறும் பேராற்றல் பெற்றவர் கவிப்பேரரசு வைரமுத்து!

இந்த பூமி

சிரிப்பவர் சொர்க்கம்

அழுபவர் கல்லறை!

இந்த உலகைப் பற்றிய உண்மையை எவ்வளவு எளிமையாகக் கூறிவிட்டார். மயக்கும் தத்துவத்தை இனிக்கும் தமிழில் எடுத்து ஊட்டுகிறார்! அற்புதம் என்ற சொல்லுக்கு எடுத்துக்காட்டே வைரமுத்துவின் கவிதை வரிகள்தான் போலும்!

இந்தியாவின் அரியபெரிய விருதைத் தமிழ் அன்னைக்கு வாங்கிக் கொடுத்த கவிஞனே! தமிழ் உணர்வுமிக்க நெஞ்சங்கள் அனைத்தும் உன்னை உச்சிமுகர்ந்து வாழ்த்துகிறது.

இன்னும் ஏராளமான காலம் இருக்கிறது. அடுத்த பெரும் விருதை அன்னைத் தமிழுக்கு கொண்டுவந்து சேர். உலகளாவிய பாடுபொருளை வரித்துக்கொள்! உன்னத காவியங்களைப் பாடு! வாழ்த்துகிறோம்!

முனைவர் ஜேஆர்

பண்டைய காவியங்கள்தான் இன்றைய புதினங்களா?

இன்று காவியங்கள் பெரும்பாலும் தோன்றுவதில்லை. இதற்குக் காரணம் காப்பியம் என்ற இலக்கிய வடிவம்தான் இன்று புதினங்களாக மறுவடிவம் பெற்றுள்ளன என்று திறனாய்வாளர்கள் கூறுகின்றனர்.

முற்காலத்தில் உரைநடை வடிவில் புதினங்கள் எழுதப்பட்டனவா? கி.பி. 2 ஆம் நூற்றாண்டில் கிரேக்க எழுத்தாளர் லாங்கஸ், டேஃப்னிஸும் குளோவும் (Daphnis and Chloe – Longus) என்ற காதல் கதையை எழுதினார். உரைநடையில் எழுதப்பட்ட இது புதினம் என்ற இலக்கிய வடிவத்துக்கு அடித்தளம் இட்டது எனலாம். கி.பி. 1020 ஆம் ஆண்டில் ஜப்பானிய மொழியில் முராசகி சிக்கிபு (Murasaki Shikibu) எழுதிய 54 அத்தியாயங்கள் கொண்ட கெஞ்சியின் கதைதான் (The Tale of Genji) முதல் புதினம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். தமிழிலும் உரை, உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் போன்ற உரைநடை இலக்கியங்கள் குறித்த குறிப்புகள் உள்ளன. எனவே காப்பியம் என்ற வடிவம்தான் உரைநடையில் எழுதப்படும் புதினமாக வளர்ச்சிபெற்றது என்று கூறுவது பொருத்தமானதாகத் தெரியவில்லை. புதினம் என்ற இலக்கிய வடிவம் தனியாகப் பரிணாம வளர்ச்சி பெற்று வந்தது என்றுதான் கூறவேண்டும்.

ஒடிசி, மகாபாரதம் போன்ற பண்டைய காப்பியங்கள் அக்காலத்தின் பிரபஞ்சவியல், அறவியல், வீரயுக ஒழுக்கம்  போன்றவற்றைப் பதிவுசெய்தது போல இக்கால புதினங்கள் இந்தக் காலத்தின் உளவியல், சமூகவியல், தத்துவப் பின்புலங்களைப் பிரதிபலிக்கின்றன. இது பொதுவாக இலக்கியங்களின் நோக்கும் போக்கும் என்பதால் காவியமே புதினமாக வளர்ச்சியுற்றது என்ற வாதத்துக்கு அரண் சேர்க்காது.

பண்டைய காப்பியங்கள் கடவுள்கள், அரக்கர்கள், இராக்கத விலங்குகள். போர்கள் போன்றவற்றை வருணித்தன. அதுபோல இக்கால புதினங்கள் தனிநபர் ஒழுக்கம், சமூகத்தில் அந்நியமாதல், சிக்கலான அமைப்புகளுக்கு எதிரான தனிமனிதனின் போராட்டம் ஆகியவற்றைப் பதிவுசெய்கின்றன. இது மேலை நாட்டு அல்லது வட்மொழி காப்பியங்களின் அடிப்படையில் கூறப்படுகிறது. தமிழில் கி.பி. இரண்டாம் நூற்றாண்டிலேயே எழுந்த சிலப்பதிகாரம் என்ற மாபெரும் காப்பியம் இன்றைய புதினங்களின் பாடுபொருளையும் சாதாரண சாமானியர்களையும் பாத்திரங்களாகக் கொண்ட காப்பியம் ஆகும். ஆகவே காப்பியம் என்றாலே கடவுள்களையும், அரக்கர்களையும், போர்களையும் பற்றியது என்பது உண்மை அல்ல.

கவிதை நடையில் எழுதப்படவில்லை என்றாலும் சில நவீன புதினங்கள், பெரும் தலைமுறைகளையும், கலாச்சாரங்களையும், வரலாற்று யுகங்களையும் பற்றி பல தொகுதிகள் கொண்ட காவியத்துக்கு நிகரான படைப்புகளாக வெளிவந்துள்ளன. இருந்தாலும் இவற்றினால் மட்டுமே அவற்றைக் காப்பியங்கள் என்று கூறமுடியாது.

இன்றைய உலகின் பிளவுபட்ட, சந்தேகங்கள் நிறைந்த, பன்முகத்தன்மை கொண்ட இயல்புக்கு மிகவும் பொருத்தமான இலக்கிய வடிவமாகப் புதினங்கள் கருதப்படுகின்றன. மனித இருப்பின் பொருள் என்ன என்பதை விளக்கும் ஒரு சமகால உரையாகவும் அது செயல்படுகிறது. இப்படிப்பட்ட சிக்கலான கருப்பொருளை உரைநடையைப் போலவே கையாளும் நவீன கவிதைகள் ஆயிரக்கணக்காக படைக்கப்படும்போது இவற்றைப் பாடுபொருளாகக் கொண்ட காவியங்கள் தோன்றும் சாத்தியக் கூறு இல்லாமல் இல்லை.

ஜேம்ஸ் ஜாய்ஸின் மாபெரும் படைப்பான ‘யுலிசிஸ்’ (Ulysses) ஹோமரின் காவியமான ஒடிசியின் (Odyssey) இதிகாசப் பரிமாணத்தைப் பிரதிபலிக்கிறது. ஆனால், கடல் அரக்கர்களுடன் சண்டையிடுவதற்குப் பதிலாக அதன் கதாநாயகன் டப்ளின் நகரத்தின் சாதாரண அன்றாட வாழ்க்கையை எதிர்கொண்டு நகர்கிறான். இது உண்மைதான் என்றாலும் குடிமக்களின் அன்றாட குடும்பப் பிரச்சினையையும் அதன் பின்விளைவுகளையும் காவியத்தாலும் கையாளமுடியும் என்பதற்குச் சிலப்பதிகாரமே சான்றாகும்.

லாரி மெக்மர்ட்ரியின் ‘லோன்சம் டவ்’ (Lonesome Dove) அல்லது ரொபர்ட்டோ பொலான்யோவின் ‘2666’ போன்ற புதினங்கள் அவற்றின் பரந்த களங்கள், விரிவான கதைக்களங்கள் மற்றும் ஆழமான கருப்பொருள் ஆகியவற்றின் காரணமாக நவீன காப்பியங்களாகத் திறனாய்வாளர்களால் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. மரபுச் செய்யுள் வடிவிலான காப்பியங்கள் பொதுவாக இப்போது ஒரு முக்கிய சமூகக் கலாச்சார ஆற்றலாக இல்லை. இருந்தாலும் ஒரு பண்பாட்டின் அடையாளம், போராட்டங்கள், விழுமியங்களை வரையறுத்து பாதுகாக்கும் காப்பியத்தின் வரலாற்றுப் பொறுப்பைப் புதினம் வெற்றிகரமாகத் தன்வசப்படுத்திக் கொண்டுள்ளது. காப்பியங்களைப் போன்றும் அதைவிட பிருமாண்டதுமான பல புதினங்கள் தோன்றியவண்ணம் உள்ளன. அதேநேரத்தில் அதிக எண்ணிக்கையில் இல்லாவிட்டாலும் இன்றைய யுகத்திலும் காவியங்கள் தோன்றாமல் இல்லை.

இருபத்தொன்றாம் நூற்றாண்டிலும் இதுவரை உலக அளவில் பதின்மூன்றுக்கும் மேற்பட்ட காப்பியங்கள் வெளிவந்துள்ளன என்பதும் குறிப்பாக ஸ்டானிஸ்லாவ் செர்னிஷெவிச்சால் (Stanislav Chernyshevich) 2025 ஆம் ஆண்டில் ருஷ்ய மொழியில் எழுதப்பட்ட நீண்ட காவியமான 1517. மிச்சேலும் டயானாவும் (1517. Michelle and Diana)  என்ற காப்பியம் வெளிவந்துள்ளது என்பதும் காவியமும் உரைநடைப் புதினமும் தனித்தனி இலக்கிய வடிவங்கள் என்பதை நிரூபிக்கின்றன. ஒன்றையொன்று பதிலீடு செய்ய முடியாது. பண்டையக் காலங்களிலும் மகா காவியங்கள் ஒரு சிலவே எழுந்துள்ளன. எடுத்துக்காட்டாக சிலப்பதிகாரம் என்ற மகாகாவியம் எழுந்து ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னரே கம்பராமாயணம் என்ற மாபெரும் காப்பியம் எழுந்தது. ஏறக்குறைய ஆயிரம் ஆண்டுகட்கு ஒரு முறையே மகா காவியங்கள் தோன்றுகின்றன என்பதை வைத்துப் பார்க்கும் போது எதிர்காலத்தில் மகாகவியங்கள் நிச்சயமாகத் தோன்றும். காப்பியம் என்பது வழக்கிழந்த வடிவம் அல்ல. காப்பியத்தின் இடத்தைப் புதினத்தால் ஒருக்காலும் இட்டுநிரப்ப முடியாது.

முனைவர் ஜேஆர்

காப்பியம் என்ற கலைவடிவம் இப்போது செத்துவிட்டது – ஆர்.ஜே.ரீஸ்

ஆர்.ஜே.ரீஸ் தம்முடைய அயலக மாணவர்களுக்கான ஆங்கில இலக்கியம் – ஓர் அறிமுகம் என்ற நூலில் காவியம் என்ற கலைவடிவம் இப்போது செத்துப்போய்விட்டது என்று கூறுகிறார். இந்தக் கடுமையான கூற்றை நியாயப் படுத்த அடுக்கடுக்கான வாதங்களை வைக்கிறார்.

நவீன எழுத்தார்கள் எவரும் இந்த வடிவத்தை இன்று பயன்படுத்துவதில்லை என்பது அவரது முதல் வாதம்.

ஆனால் அதற்காகப் பண்டையக் காவியங்களான இலியடையும் ஒடிசியையும், ஏனிடையும் டிவைன் காமெடியையும் இன்று யாரும் படித்துச் சுவைப்பதில்லை என்பது இதற்கு அர்த்தமல்ல; சிலராவது படிக்கிறார்கள் என்றாலும் பெரும்பாலான மக்கள் படிப்பதில்லை; கல்வி அரங்குக்குள் மட்டுமே அவை சுருண்டு படுத்துக்கொண்டு விட்டன என்று குறிப்பிடுகிறார்.

தற்கால இலக்கியத்தில் காப்பியம் என்பது ஓர் உயிரிழந்த கலைப்பொருள். வளர்ச்சி அடையாத வடிவம்.

பெரும்பாலும் காவியங்கள் கடவுள்கள் அல்லது மாபெரும் வீரர்களைப் பற்றிய வரலாற்று அல்லது புராணப் பாடுபொருட்களையே விதந்தோதுகின்றன. மரபு வழிக் காப்பியங்கள் போற்றும் இந்த மாபெரும் வீரர்கள் தங்கள் நாட்டுக் கலாச்சாரங்கள் மூலம் அடையாளப்படுத்தப்படுகிறார்கள். அக்கில்லஸ், அகமெம்னான், ஹெக்டர், ஒடீசியஸ் ஆகியோர் உயரிய கிரேக்கக் கலாச்சாரத்தின் அடையாளங்கள். இராமன், யுதிஷ்டிரர் ஆகியோர் ஆரியக் கலாச்சாரத்தின் அடையாளங்கள்.

ஆனால் தற்காலம் ஒரு வீர யுகம் அல்ல. உன்னதம், பிரமாண்டம் ஆகியவை உலர்ந்து காய்ந்து போய்விட்டன. அதனால் இன்றைய உலகில் ஓர் படைப்பாளி ஒரு காவியத் தலைவனை முன்னிலைப் படுத்துவது  காலத்திற்கு ஒவ்வாதது .ஆகும்.

டி. எஸ். எலியட் தன் பாழ்நிலம் (The Waste Land) என்ற கவிதையிலும், தாமஸ் மான் தன் மந்திர மலை (The Magic Mountain) என்ற புதினத்திலும் போருக்குப் பிந்திய நவீன உலகில் வீரம், தெய்வீகம், காதல் போன்ற அனைத்து உன்னதப் பண்புகளின் மரணத்தை பற்றிப் பாடியுள்ளனர்; ஆன்மீக வறட்சியும் உணர்ச்சியற்ற வறண்ட நிலையும் கொண்ட, துண்டு துண்டாய் உடைந்த நரகத்தைப் போன்ற, சாரமற்ற ஒரு சூழலாகவே அவர்கள் இந்த நவீன உலகைச் சித்தரித்துள்ளனர். இது முற்றிலும் உண்மையானதாகவே தோன்றுகிறது. இப்படிப்பட்ட உலகில் பழங்காவியங்கள் போற்றும் உன்னதங்கள் படிப்போருக்கு வெறுப்பூட்டும்.

நவீன வசகர்கள் இத்தகைய வீரர்களுடனும் இலக்கிய வடிவங்களுடனும் இணைத்து தங்களை அடையாளப்படுத்திக்கொள்ள முடியாது.

காவியத் தலைவன் இல்லாத காவியத்தையோ வீரம் பற்றிய செய்தி இல்லாமல் ஒரு காவியத்தையோ பாட முடியாது. ஆகவே நவீன இலக்கிய உலகில் காவியத்துக்கு இடமில்லை.

நவீன காலம் கலைகள் விடுதலை பெற்று சுதந்திரமாக உலாவும் காலம் ஆகும். நவீன எழுத்தாளர்கள் மரபுக்கு அடிமையானவர்கள் அல்லர். நவீன இலக்கியம் வடிவத்திலும் உத்தியிலும் நொடிக்கு நொடி மாறிவருகிறது. யுகங்களுக்கு முற்பட்ட வடிவங்களுக்கும் மரபுகளுக்கும் ஒரு காவியக் கவிஞன் இணங்கிப் போக வேண்டும். எடுத்துக்காட்டாக ஒரு காவியப் புலவன் முதலில் கடவுளையோ கலைதெய்வத்தையோ போற்றி வணங்க வேண்டும். ஒரு காவியக் கவிஞன் ஹோமரின் உவமைகளைப் பயன்படுத்த வேண்டும். ஒரு மரணம் அடைந்த வீரனின் நினைவஞ்சலியாக அல்லது ஒரு மாபெரும் வெற்றியைக் கொண்டாடும் விதமாக வீரவிளையாட்டுகள் காவியத்தில் இடம்பெற வேண்டும். காவியம் செயலோட்டத்தின் நடுவில் இருந்து தொடங்க வேண்டும்.  இந்த நிபந்தனைகள் கலை சுதந்திரத்திற்குக் குறுக்கீடுகள் ஆகும். இந்தக் காரணங்களால் ஒரு காப்பியத்தை எழுதும் உத்வேகமோ அல்லது படிக்கும் ஆர்வமோ இந்த நூற்றாண்டில் எழ வாய்ப்பே இல்லை.

இன்றைய உலகம் அதி வேகமாக ஓடுவதால் மனித வாழ்க்கை பெரும் அழுத்தத்திற்கு உள்ளாகிறது. பொருளியல் நெருக்கடி உச்சத்தில் உள்ளது. மின்னணு ஊடகத்தின் படுபயங்கர வளர்ச்சியால் மானிட வாழ்க்கை தாக்கத்திற்கு உள்ளாகிறது. பழங்கால கிரேக்க சமூகத்திலும், எலிசபெத் அரசியின் காலத்து இங்கிலாந்திலும் வாழ்ந்த மக்களுக்கு இலியட், தேவதை ராணி போன்ற இலக்கியங்களைக் கற்று மகிழ நேரமும் ஆர்வமும் இருந்தன.

தற்கால மனிதனின் வாழ்க்கை மிகவும் மாறிவிட்டது. காவியங்களைப் படிக்க அவனுக்கு நேரமில்லை. இவையே தற்காலத்தில் காவிய வடிவத்தின் மரணத்திற்கு வழிகோலின.

தற்கால இலக்கியத்தில் காவியம் எழுதுவது சாத்தியமற்றது. ஏனெனில் ஏராளமான இலக்கியக் கொள்கைகள் தோன்றி விட்டன. அவை காப்பியம் என்ற இலக்கிய வடிவத்துக்கு துணைபோவதில்லை. நவீன காலத்தில் புதுப்புது இலக்கியக் கொள்கைகள் மலர்ந்து செழிக்கின்றன. பெர்டினாண்ட் டி சோசர் (Ferdinand de Saussure) ஜாக் தெரிதா (Jacques Derrida), ரோலண்ட் பார்த் (Roland Barthes), ஸ்டான்லி ஃபிஷ் (Stanley Fish), பியர் மாகரே (Pierre Macherey) ஆகியோரின் வருகையோடு இணந்து பல நுட்பமான கொள்கைகளும் தோன்றிவிட்டன. அமைப்புடைப்பு (Deconstruction), வாசகர் மையக் கோட்பாடு (Reader Response)[1], இன்மைக்கோட்பாடு (Theory of Absence) ஆகிய கோட்பாடுகள் ஒரு குறிப்பிட்ட உரை அல்லது பிரதி ஓரளவாவது அறிந்துகொள்ளக்கூடிய தெளிவான பொருளைக் கொண்டது என்ற விமரிசன நிலைப்பாட்டின் மீது கடுமையான தாக்குதலைத் தொடுத்துள்ளன. படைப்பாளியின் மரணத்தை இந்தக் கொள்கைகள் பிரகடனப்படுத்தின. எனவே ஆசிரியரின் நோக்கங்களும் அவர் சொல்ல வந்த செய்திகளும் முக்கியம் இழந்து போகின்றன. அதுமட்டுமல்லாமல் பொருளின் பொருண்மை நிலையற்றது (differed/deferred) என்ற தெரிதாவின் இறுதி வாதத்தினையும், பொருள் என்பது பிரதிக்குள் இல்லை, அதற்கு வெளியேயுள்ள இன்மைகளில்தான் (absences) இருக்கிறது என்ற மாகரேயின் கருத்தினையும் தொடர்ந்து, பொருள் என்ற கோட்பாடே முற்றிலும் தற்காலிகமானதாகவும் சார்புடையதாகவும் (contingent) மாறிவிட்டது. ஒரு பேரிலக்கியம் (காப்பியம்) ஓர் ஒருங்கிணைந்த செய்தியையும் பொருளையும் கொண்டிருக்க வேண்டும் என்பதால் சிதறுண்ட பலபொருள் சாத்தியங்களால் நிழலிடப்பட்டுள்ள சமகால இலக்கியத்தில் ஒரு பேரிலக்கியத்திற்கான இடம் என்பதே இல்லாது போய்விடுகிறது. உண்மையைக் கூறப்போனால் காப்பியம் என்னும் ஓர் பேரிலக்கியம் இப்போது இறந்துவிட்டது.

தொகுத்தளித்தவர்: முனைவர் ஜேஆர்


[1] வாசகர் மையக் கோட்பாடு (Reader Response) என்பது வாசிப்பை, வாசகருக்கும் பிரதிக்கும் இடையில் நிகழும் ஒரு துடிப்பான பரிமாற்றமாகப் பார்க்கும் ஓர் இலக்கியக் கோட்பாடு ஆகும். பிரதியின் பின்னே மறைந்திருக்கும் ஆசிரியரின் பொருளைத் தேடி அலைவதை விட்டுவிட்டு அந்தப் படைப்போடு உங்களுக்கு ஏற்படும் தனிப்பட்ட எதிர்வினைகள், சிந்தனைகள், உணர்வுபூர்வமான தொடர்புகள் ஆகியவற்றை ஆராய்ந்து விளக்கி நிலைநாட்டுகிறது இக்கோட்பாடு

காலந்தோறும் காவிய முயற்சி

Welcome to WordPress! This is your first post. Edit or delete it to take the first step in your blogging journey.

காலந்தோறும் காவிய முயற்சி

[2021 ஆம் நூற்றாண்டின் தமிழ் மகா காவியம் ஒன்று தன் வண்ணச் சிறகை விரித்துப் பறக்க எத்தனிக்கும் இந்த ஒளிமயமான ஆண்டில் இந்த வலைத்தளத்தில் காவியம் குறித்த ஒரு முன்னோட்டம் தொடர்ந்து வெளிவர உள்ளது. இந்தக் கட்டுரைகளைப் படிக்கும் வாசகர்கள் காவியம் குறித்தத் தங்கள் கண்ணோட்டங்களைப் பதிவுசெய்யலாம்]

கி.மு. 2100 ஆம் ஆண்டில் இருந்தே உலக இலக்கியங்களில் பெருங்காவியம் படைக்கும் முயற்சிகள் தொடங்கிவிட்டன எனலாம். அதற்கு முன் அவை வாய்மொழிக் காப்பியங்களாக வழங்கி வந்திருக்கலாம். ஏறத்தாழ 2100 ஆம் ஆண்டில் மெசொப்பொத்தேமியாவில்[1] களிமண் பலகைகளில் சுமேரிய மொழியில் எழுதப்பட்ட கில்காமேஷ் காவியம்தான் (Epic of Gilgamesh) உலகின் முதன்முதலில் எழுதப்பட்ட காவியம் என்று கருதப்படுகிறது. இது கி.மு. 1300 களில் பாபிலோனியப் பாடலாக முழுமையாகத் திருத்தி எழுதப்பெற்றது.

வாய்மொழிக் காப்பியங்களாக விளங்கிய கிரேக்கக் காப்பியங்களான ஹோமரின் இலியடும் ஒடிசியும் கி.மு. எட்டாம் நூற்றாண்டைச் சார்ந்தவை என்றும், வடமொழிக் காப்பியமான வால்மீகியின் இராமாயணமும், வியாசரின் மகாபாரதமும் கி.மு 5-4 ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவை என்றும் கருதப்படுகின்றன. இவை காலத்தை வென்று தடம் பதித்தவை. இடைப்பட்டக் காலங்களில் பல காப்பியங்கள் தோன்றி மறைந்திருக்கலாம்.

தமிழிலும் காலந்தோறும் பல காப்பிய முயற்சிகள் நடந்தன. ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறுங் காப்பியங்கள் ஆகிய சொற்றொடர்கள் தமிழில் நடந்த எழுச்சிமிக்கக் காப்பிய முயற்சிகளுக்குச் சான்றாகும். தகடூர் யாத்திரை போன்ற பல காப்பியங்களின் பெயர்கள் மட்டுமே இன்றளவும் நின்று நிலவுகின்றன. 

 ஆனால் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் ஓர் இளவரசனான இளங்கோவடிகள் குடிமக்களைப் பற்றிப் பாடிய சீர்மிகும் காப்பியமான சிலப்பதிகாரம் தோன்றியது. ஏறக்குறைய 2000 ஆண்டுகளுக்கு முன்னர் தற்கால புதினத்தைப் போன்ற அமைப்புடன் ஒரு நவீன காவியத்தைப் பாடிய இளங்கோவடிகளின் அறிவுத் திறத்தைப் போற்றி மகிழாமல் இருக்க முடியாது. இதனால்தான் மகாகவி பாரதியார் “நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் மணியாரம் படைத்தத் தமிழ்நாடு” என்று விதந்தோதினார்.

அடுத்து ஓர் ஒப்புயர்வற்ற ஒளிமிகும் காப்பியத்தைப் பெற தமிழ் அன்னை ஆயிரம் ஆண்டுகள் தவம் கிடக்கவேண்டி இருந்தது. கம்பன் என்றொரு மானிடன் வாழ்ந்ததும் அவன் அழியா அழகுடைய இராம காவியத்தை உலகுக்குத் தந்ததும் ஒரு மாபெரும் வரலாற்று நிகழ்வு. எந்த ஓர் உலக மகாகாவியத்துக்கும் சவாலாக நின்று கருத்திலும் கற்பனையிலும், மொழிநடையிலும் முருகியலிலும், உத்தியிலும் உன்னதத்திலும் உயர்ந்த வானைத் தொட்டவன் கம்பன். அடுத்து ஓர் ஆயிரம் ஆண்டுகள் ஆன பின்னரும் அது போன்றதொரு மகத்துவம் தமிழில் படைக்கப்படவில்லை என்பது கால வெள்ளத்தைப் புலவர்களின் துணையுடன் நீந்திவந்துகொண்டிருக்கும் தமிழின் குறையல்ல தமிழர்களின் குறையே!

கி.மு. 2100 ஆம் ஆண்டில் தோன்றிய கில்காமேஷில் தொடங்கிய காப்பிய முயற்சி 2025 ஆண்டில் ஸ்டானிஸ்லாவ் செர்னிஷெவிச் எழுதிய 1517: மிச்சேலும் டயானாவும் என்ற பெரும் காப்பியம் வரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. உலக மொழிகளில் இதுவரை படைக்கப்பட்ட காவியங்களின் எண்ணிக்கை ஏறக்குறைய 372 ஆகும்.

காப்பியம் என்றால் மகத்துவம். காப்பியம் என்றால் உன்னதம். பிற இலக்கிய வகைகளால் தொட முடியாத சிகரத்தைத் தொடுவதுதான் அதன் இலக்கு. மனிதக் கற்பனையின் உச்சம். மனித அறிவின் கொடுமுடி. மனிதம் என்பதே அதன் கருப்பொருள். இதைச் சிந்தனை வானில் உலா வந்து கொண்டிருக்கும் பேரொளிச் சுடரான கம்பன் நான்கே வரிகளில் இப்படிச் சுருக்கி வகுக்கிறான்:

வண்மை இல்லை ஓர் வறுமை இன்மையால்;
திண்மை இல்லை நேர் செறுநர் இன்மையால்;
உண்மை இல்லை பொய் உரை இலாமையால்;
வெண்மை இல்லை பல் கேள்வி மேவலால் (கம்ப. 84)[2]

இப்படிப்பட்ட ஓர் உலகம் தோன்ற வேண்டும் என்பதுதான் கம்பன் காவியத்தின். பெருங்கனவு. உலத்தில் தோன்றிய உன்னதக் காப்பியங்கள் அனைத்தின் அறப்பிழிவும் இதுதான். இது வேறொன்றும் இல்லை. சிந்தனைச் சிற்பி காரல் மார்க்ஸ் காணத்துடித்தப் பொதுமை உலகம்தான். விவிலியம் மாதிரியாகப் படைத்துக்காட்டிய ஈதண் தோட்டம்தான் (The Garden of Eden). மனித குலம் அடைய வேண்டும் என்று கவிஞர்கள் கனவுகண்ட சொர்க்க பூமிதான். இதுதான் காப்பியத்தின் ஒரே நோக்கமும் இலக்கும் ஆகும்.

மானிட சிந்தனையின் மகத்துவமானவைகளை மட்டுமே தலைசிறந்த காவியங்கள் மிகப் பிரமாண்டமாக எடுத்து இயம்புகின்றன இந்த நோக்கில் கற்பனை வளத்தாலும், கருத்துகளின் சிறப்பாலும் உலகில் இதுவரை தோன்றிய காப்பிய முயற்சிகளில் வானத்தின் உச்சியைத் தொட்ட வெகு சில ஈடு இணையற்ற காப்பியங்களை இப்படிப் பட்டியலிடலாம்:

  1. இலியட்/ஒடிசி: கிரேக்கம்,  ஹோமர்,   கி.மு 8 ஆம் நூற்றண்டு
  2. வால்மீகி இராமாயணம்/வியாசரின் மகாபாரதம்: வடமொழி. கி.மு. 5-7 ஆம் நூற்றாண்டு
  3. ஏனிட்: விர்ஜில், இத்தாலி, கி.மு 29-19
  4. சிலப்பதிகாரம்: இளங்கோவடிகள், தமிழ், கி.பி. 2 ஆம் நூற்றாண்டு
  5. கம்பராமாயணம்: கம்பர், தமிழ், கி.பி. 12 ஆம் நூற்றாண்டு
  6. இழந்த சொர்க்கம்: மில்ட்டன், ஆங்கிலம், 17 ஆம் நூற்றாண்டு (கி.பி.1667)

[அடுத்து வெளிவர இருக்கும் கட்டுரை ‘காவியமும் புதினமும் ஒன்றல்ல’. இரண்டும் வெவ்வேறு வடிவங்கள். காவியத்தைப் புதினத்தால் பதிலீடு செய்ய முடியாது. காவியம் உலகளாவியது. காவியம் என்பது கனவுகளின் தொகுப்பு. உன்னதங்களின் உலா. பட்டை தீட்டிய கருத்து வைரைங்களாலான பொற்சரம். படித்து ஆய்ந்து அறிவின்பம் பெறுவதற்கானது. படித்துப் பொழுது போக்கி உணர்வின்பம் மட்டுமே பெறுவதற்கானது அல்ல.]

[முனைவர் ஜேஆர்]


[1]மெசொப்பொத்தேமியா (Mesopotamia) என்பது தைகிரிசு மற்றும் யூபிரட்டீஸ் ஆறுகளுக்கு இடைப்பட்ட வளமான நிலப்பரப்பைக் குறிக்கும். நவீன ஈராக், குவைத், துருக்கி, மற்றும் சிரியா ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய இந்தப் பகுதி, உலக நாகரிகத்தின் தொட்டில் என்று அழைக்கப்படுகிறது. சக்கரம், எழுத்து வடிவம், வேளாண்மை ஆகியவை இங்குதான் தோன்றின.

[2] இராமனின் கோசல நாட்டில் வறுமையே இல்லாததால் அங்கு யாருக்கும் தானம் செய்யும் (வண்மை) நிலை இல்லை; எதிர்த்துப் போரிடப் பகைவர் எவரும் இல்லாததால் அங்கு வீரத்தைக் காட்ட (திண்மை) வழியில்லை; பொய் பேசுபவரே இல்லாததால் அங்கு வாய்மையின் (உண்மை) பெருமை தெரியவில்லை; மக்கள் அனைவரும் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவதால் அங்கு அறியாமை (வெண்மை) என்பதே இல்லை (த.இ.க.க)

Blog at WordPress.com.

Up ↑