பாரதிக்குப் பின் தமிழ்க் கவிதைகளின் வளர்ச்சி போற்றத் தக்கதாக உள்ளது. புதிய நடையும் புதிய உணர்வும் பொங்கி வழிகிறது. பாவேந்தரைத் தொடர்ந்து பல கவிஞர்கள் எரிமலைத் தமிழை உருவாக்கியுள்ளார்கள். தன்னுணர்ச்சிப் பாடல்கள் கடல்போல் பெருகியுள்ளன. புதுக் கவிதைகள் என்ற மதுக் கவிதைகள் சிறகடித்து பறக்கின்றன. ஆனால் தமிழில் பெருங்காவியங்களாகப் போற்றத்தக்க கவிதைப் படைப்புகள் இதுவரைக்கும் எழவில்லை என்பது ஒரு பெருங்குறையாகும்.
ஆனால் புதினம், சிறுகதை என்னும் நவீனத் தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சி ஆரோக்கியமானதாகவும் எந்த ஓர் உலக மொழி இலக்கியத்துக்கும் ஈடுகொடுப்பதாகவும் இருக்கிறது. அப்படியானால் உலகளாவிய விருதுகளைத் தற்காலத் தமிழ் இலக்கியங்கள் ஏன் பெறவில்லை என்ற குதர்க்கமான கேள்விகளைச் சிலர் எழுப்பலாம். சிறந்த தமிழ்ப் படைப்புகள் சிறந்த முறையில் உடனுக்குடன் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படாததும் படைப்புகள் பற்றிய ஆங்கில மொழித் திறனாய்வுகளை-முன்மொழிவுகளை உடனுக்குடன் உரிய தேர்வுக் குழுவினரின் பார்வைக்குக் கொண்டுசெல்லாததுமே தமிழ்ப்படைப்புகள் உரிய உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற முடியாமல் போனதற்கான காரணங்கள் ஆகும். உரிய கவனம் செலுத்தப்படாவிட்டால் இந்நிலை இன்னுமொரு நூறாண்டுகளுக்குத் தொடர்ந்தாலும் அதில் வியப்பில்லை.
வரலாற்று இலக்கியப் படுகையில் வெள்ளமென பேராற்றலுடன் புரண்டுவந்த தமிழ்க்கவிதையின் தேக்கத்தைத் தளர்த்தி அதன் போக்கை மகாகவி பாரதி புதிய வழியில் மாற்றினான். அதைப்போல உரைகளில் மட்டுமே ஓங்காரமிட்டுக் கொண்டிருந்த தமிழ் உரைநடையை விடுவித்து அதனுடன் மக்கள் மொழியின் உயிர்த்துடிப்பை இரண்டறக் கலந்து தமிழை இயங்கும் செம்மொழியாக மாற்றிய பெருமை தமிழின் கதையிலக்கிய படைப்பாளிகளையே சேரும். ஒரு பருந்துப் பார்வை பார்த்தாலே போதும். உலக இலக்கியத் தரம் வாய்ந்த பல படைப்பாளிகள் சிக்குவார்கள். தமிழின் எளிமையையும் எழில் நலத்தையும் எத்தனை வகையாக எடுத்தாள்கிறார்கள். எத்தனை வகையான கதைப் பின்னல்கள். எத்தனை வகையான மொழி நடைகள். உள்ளத்தை உருக்கும் உரையாடல்கள். எண்ணத்தைக் கவரும் வருணனைகள். சங்க இலக்கியத்தின் எளிமைக்கும் எதார்த்தத்திற்கும் எள்ளளவும் சளைக்காத எத்தனையோ வகையான அரும்பெரும் இலக்கியங்களை நவீன இலக்கிய படைப்பாளிகள் படைத்துத் தந்துள்ளார்கள், தொடர்ந்து படைத்துக்கொண்டு வருகிறார்கள்.
தமிழ் இலக்கியத்தின் வண்ணச் சிறகுகளாக விளங்கும் சில புகழ்பெற்ற நவீன படைப்போவியங்கள் உரைநடைக் காவியங்கள் என்று புகழப்படத் தக்கன. (பட்டியல் தரவரிசைப்படியானது அல்ல. பலநூறு உரைகாவியங்களில் எடுத்துக்காட்டாக ஒருசிலவே) . ஒரு புளிய மரத்தின் கதை (சுந்தர ராமசாமி), ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் (ஜெயகாந்தன்), கோபல்ல கிராமம் (கி ராஜநாராயணன்), பொய்த்தேவு ( க நா சுப்ரமணியம்) தலைமுறைகள் (நீலபத்மநாபன்). விஷ்ணுபுரம் (ஜெயமோகன்), 18 வது அட்சக்கோடு (அசோகமித்திரன்), சாயாவனம் ( சா. கந்தசாமி), கோவேறு கழுதைகள் (இமையம்), மோகமுள் (தி.ஜானகிராமன்) கடல்புரத்தில் (வண்ணநிலவன்), புயலிலே ஒரு தோணி (ப. சிங்காரம்), அம்மா வந்தாள் (தி.ஜானகிராமன்), நாகம்மாள் (ஆர்.சண்முகசுந்தரம்), நினைவுப்பாதை (நகுலன்), கரைந்த நிழல்கள் (அசோகமித்திரன்), புத்தம் வீடு (ஹெப்சிபா ஜேசுதாசன்), ஆழி சூழ் உலகு (டி.குரூஸ்), வெக்கை (பூமணி), கிருஷ்ணப்பருந்து (ஆ.மாதவன்), வானம் வசப்படும் (பிரபஞ்சன்) குருதிப்புனல் (இந்திரா பார்த்தசாரதி), நெடுங்குருதி (எஸ் ராமகிருஷ்ணன், மணற்கடிகை (எம். கோபாலகிருஷ்ணன்).
இவற்றை ஏன் உரைகாவியங்கள் என்று போற்றுகிறோம் என்றால் இவை ஒவ்வொன்றும் தமிழுக்குப் புதிய கற்பனைகளையும் நடைகளையும் சேர்ப்பதுதான். இந்தப் படைப்பாளிகளில் பலர் பெரும் காவியக் கவிஞர்களுக்கு ஈடானவர்களே. எடுத்துக்காட்டாக நெடுங்குருதி என்ற ஓர் ஒப்பற்ற காப்பியப் படைப்பு. ஒரே ஒரு ஒற்றை உவமையின் மூலம் புதினத்தின் கருப்பொருளையும் மானிட வாழ்வின் எதார்த்தத்தையும் சித்திரமாக்குகிறது:
வாழ்வின் இரக்கமற்ற கைகளோடு எதிர் அமர்ந்து பகடையை உருட்டவும், அதை வென்று கெக்கலிக்கவும் முயற்சிக்கிறார்கள். ஆனால் எப்போதும்போல முடிவில் வாழ்வு வெற்றிலையை மடித்து வாயிலிட்டு ருசிப்பதுபோல வெகு சாதாரணமாக யாவரது வாழ்க்கைக் கணக்கையும் முடித்துக்கொண்டு உதட்டில் சிவப்புச் சாறு வழிய நடந்து போய்விடுகிறது.
சற்று யோசித்துப் பாருங்கள். இந்த உவமை ஒரு காப்பிய உவமைக்கு இணையாக இருக்கிறதல்லவா? வாழ்வோடு மனிதன் எதிர் எதிராக அமர்ந்து கொண்டு பகடையாடிக் கொண்டிருக்கிறானாம். இறுதியில் வாழ்க்கை மனிதனை வெற்றிலை போல் சுருட்டி சவைத்துவிட்டு உதட்டில் சிகப்புச் சாறு வழிய நடந்து செல்கிறதாம். என்ன ஒரு பிருமாண்டமான கற்பனை. பாற்கடலை அருந்த அதன் கரையில் ஒரு பூனையைப் போல் அமர்ந்திருந்த கம்பனின் கற்பனைக்கு ஈடான கற்பனை அல்லவா இது!
சென்ற நூறாண்டுகளில் தமிழில் நிகழ்ந்த மகத்தான இலக்கிய முயற்சி என அசோகமித்திரனால் பாரட்டப்பட்ட விஷ்ணுபுரம் உண்மையிலேயே ஓர் உரைநடைக் காவியம்தான். ஒருபுறம் வரலாற்றையும் மறுபுறம் தத்துவத்தையும் இருபெரும் சிறகுகளாகக் கொண்டு எழுந்து பறந்து வரும் இந்தக் காவியப் படைப்பு தமிழுக்குக் கிடைத்துள்ள வரப்பிரசாதமே. இந்த உரை காவியத்தில் ஒரு வருணனை:
தலைக்கு மேல் மகத்தான அலட்சியத்துடன்
பெருவெளி மல்லாந்து கிடக்கிறது.
கொஞ்சம் நின்று நிதானித்துச் சிந்தித்துப் பாருங்கள்.. கிறுகிறுக்க வைக்கும் கற்பனை.
இப்படி உரைநடையிலேயே கவிதையின் பேரழகை எல்லாம் கொண்டு குவிக்கும் இந்த எழுத்து விற்பன்னர்களின் முன் கவிதையில் எழுதப்பட்ட காவியங்கள் எடுபடவில்லை. காவியங்கள் எழுந்தன ஆனால் அவை பெருங்காப்பியங்களாக மலரவில்லை. நீண்ட பாடல்களாக நின்றுவிட்டன. கற்பனை ஆறுகளாகப் பெருக்கெடுத்து ஓடாமல் கான்கிரீட் ஓடைகளாகப் போய்விட்டன.
உரைநடையில் இந்த மயக்கும் மந்திரவாதிகள் என்னவெல்லாம் சித்துவிளையாட்டுகளை ஆடினார்களோ அதை கவிதையில் கொண்டுவருவது சாத்தியமில்லை. இருந்தாலும் இருபத்தொன்றாம் நூற்றாண்டில் முயன்று பார்க்கும் முனைப்புடன்கூட இதுவரை தமிழில் காவியங்கள் எதுவும் எழுதப்படவில்லை.
ஜேஆர்
Leave a comment