புதினமும் காவியமும் ஒன்றாகுமா?

தமிழில் ஏன் தற்போது மகாகாவியங்கள் எதுவும் தோன்றுவதில்லை என்று கேட்டால் காவியங்களுக்கு பதிலாகத்தான் இப்போது பெரும்பெரும் புதினங்கள் எழுதப்படுகின்றன என்று கூறப்படுகிறது. உலக இலக்கிய அரங்கிலும் இதே பதில்தான்.

ஆங்கிலத்தில் லியோ டால்ஸ்டாயின் போரும் அமைதியும், கேப்ரியேல் கார்சியா மார்க்கஸின் ஓராயிரம் ஆண்டு தனிமை, ஜே ஆர் ஆர் தொல்கீயனின் லார்டு ஆஃப் த ரிங்க்ஸ், ஜேம்ஸ் ஜாய்சின் யுலிசஸ், விக்டர் ஹியூகோவின் லெஸ் மிசரபிள் போன்ற பெரும் பட்டியல் காட்டப்பட்டு இவை எல்லாம் காப்பியங்களுக்கு நிகரானவை என்று கூறப்படுகிறது.

தமிழிலும் ஜெயமோகனின் விஷ்ணுபுரம், எஸ். ராமகிருஷ்ணனின் நெடுங்குருதி, எம்.கோபாலகிருஷ்ணனின் மணற்கடிகை, கல்கியின் பொன்னியின் செல்வன் ஆகிய மாபெரும் நாவல்கள் காவியங்களுக்கு இணையானவை என்று எடுத்துரைக்கப் படுகிறது.

உண்மையில் இவை எல்லாம் பிரமாண்டமான படைப்புகள்தான். காப்பியங்களை வெல்லக்கூடிய தகுதி  படைத்தவைகள்தான். ஆனால் எத்தகைய மகத்துவமான படைப்புகளாக இருந்தாலும் புதினம் புதினமே. காவியம் காவியமே. புதினம் என்ற இலக்கிய வடிவமும் காவியம் என்ற இலக்கிய வடிவமும் வெவ்வேறானவை.

கி.மு. இரண்டாம் நூற்றாண்டு முதற்கொண்டே புதினம் என்ற தனிவடிவம் தோன்றி மெதுவாக வளர்ந்து பின்னர் முதன்மை இலக்கிய வடிவமாகி செழித்தோங்கியது. காப்பியங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் தோன்றின. அதுவும் மகா காவியங்கள் எனப்படுபவை மிகக் குறைவே. ஆங்கிலத்தில் இழந்த சொர்க்கம் மட்டுமே பெருங்காப்பிய நிலையைப் பெற்றது. தமிழில்கூட மகாகாவியங்கள் என்றால் அவை சிலப்பதிகாரமும் கம்பராமாயணமும் மட்டுமே.

காப்பியமும் புதினமும் வெவ்வேறானவை. காப்பியம் கவிதை நடையில் இருக்கும். புதினம் உரைநடையில் எழுதப்படும். கவிதை நடைப் புதினங்கள் நடை வேறுபாடே தவிர புதிய இலக்கிய வடிவம் அல்ல.

ஒரு மாபெரும் புதினத்தோடு ஒரு மகாகாவியத்தை எப்படி ஒப்பிட முடியாதோ அது போல ஒரு மகாகாவியத்தோடு ஒரு மாபெரும் புதினத்தையும் ஒப்பிட முடியாது.

அந்தந்த வடிவங்கள் அதுஅதற்கென கருத்து நுட்பங்களையும், வடிவ அமைப்புகளையும், தனித்த நோக்குகளையும், மொழிநடைகளையும், கதைப்பின்னல்களையும், பாத்திரப் படைப்புகளையும் கொண்டவை.

ஒரு மாபெரும் புதினம் எத்தகைய பாடுபொருளையும் தன் தனித்துவமான நோக்கிற்கேற்ப குழைத்து வடிக்கும் திறன்பெற்றது. உரைநடை வடிவம் வழங்கும் நெகிழ்வைப் பயன்படுத்தி கற்பனை ஆற்றலை எதார்த்தத்துடன் இணைக்கும் வல்லமை கொண்டது. கவிதை நடையில் எழுதப்படும் காவியத்துக்கு இந்தச் சுதந்திரம் இல்லை.

உள்ளதை உள்ளபடி விவரிக்கும் திறன் உரைநடைக்கே உண்டு. இதனால் காவியம் படிமங்களையும், உவமைகளையும், உருவகங்களையும், மௌனங்களையும், இடைவெளிகளையும், குறிப்புகளையும், யூகங்களையும் இன்ன பிற செய்யுள் நுட்பங்களையும் பயன்படுத்துவதால் அதன் அழகும், நடையும், உய்த்துணர வைக்கும் ஆற்றலும் காவியத்தை உன்னதமாக்குகிறது. இதனால் கவித்துவமும், கற்பனை வளமும், ஆய்வு வேட்கையும் அற்ற ஒரு சாதாரண வாசகனால் காப்பியத்தின் ஆழத்தை அறிந்து உணர்ந்து சுவைக்க முடியாது. இதையே கவிதைச் சிகரத்தைத் தொட்டு உலாவிய மகா கவிஞரான பாரதி,

அணிசெய் காவியம் ஆயிரம் கற்பினும்

ஆழ்ந்திருக்கும் கவியுளம் காண்கிலார்

என்று அழகுறப் பாடினார்.

சதிராடும் சந்தங்களையும், சிலிர்ப்பூட்டும் ஓசை நயங்களையும், மயக்கவைக்கும் மொழிநுட்பங்களையும் தன்னுடன் அழைத்துக்கொண்டு ஒரு மகாகாவியம் கற்பனை வீதியில் ஒரு கந்தர்வ ராணியைப் போல் எழிலாக நடைபயில்கிறது.

புதினத்தைத் தனியாக நடந்து செல்லும் ஒரு பெண்ணுக்கு ஒப்பிட்டால், எழில்பொங்கும் தோழியர் புடைசூழச் செல்லும் ஓர் அலங்காரப் பதுமையாம் இளமைமிகும் கன்னியான இளவரசியைப்போல செல்வதாக ஒரு மகாகாவியதை வருணிக்கலாம்.

உரைநடைப் புதினம் எதார்த்தத்தை அப்படியே ஓவியமாக்குகிறது. ஒரு தேர்ந்த படைப்பாளி தன் நோக்கத்தையும் கொண்ட கொள்கையையும் வெளிப்படையாகத் தன் படைப்பில் கூறுவதில்லை. பாத்திரங்களின் வாயிலாக மறைமுகமாக பதிவுசெய்கிறான். இதுவே அவனது புதினத்தை மாபெரும் படைப்பாக மாற்றுகிறது. புதினத்தைப் பிரச்சாரக் கருவியாக மாற்றினால் அந்தப் படைப்பு தன் கலை நயத்தை இழந்து போகும்.

ஆனால் மாபெரும் காவியம் நன்மைக்கும் தீமைக்கும் நடுவில் நடக்கும் இடையறாத போரைப் பாடுகிறது. தன் நோக்கத்தை முதலிலேயே பிரகடனப் படுத்துகிறது.

அரைசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்.

ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்.

உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்

என்ற தன் முப்பெரும் முழக்கத்தோடு தொடங்கி அவை நிகழ்வுற்று முடிவதை காப்பியப் போக்கில் காட்டுகிறது நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்ற மகாகாவியம்.

பிறனில் விழைவோர் கிளையொடுங் கெடுவர் என்ற மெய்ப்பொருளை தன் காவியத்தின் மூலம் நிறுவிக் காட்டுகிறான் கம்பன் என்னும் காவியக் கவிஞன்.

னிதனின் ஆதி மீறலையும்

மரணத்து டன்நம் துயரங்களை

மண்ணில் கொணர்ந்த தடைபெற்ற

மரத்தின்  மரணச்சுவை கொண்ட

கனியைப் பற்றியும் மாபெரிய

 மனிதர்  நம்மை மீட்டெடுத்து 

திரும்பவும் அளித்தப் பேரின்ப

நிலைவரைப் பாடுக  கவிதேவே!

(இழந்தசொர்க்கம்,  தமிழாக்கம் பென்செருபாபேல்)

என்று முதல் சில வரிகளிலேயே தன் காப்பிய நோக்கத்தைக் கூறிவிட்டு மில்ட்டன் தன் மகாகாவியத்தைப் பாடுகிறான்.

புதினம் இப்படித்  தன்  நோக்கங்களை வெளிப்படையாகப் பிரகடனப் படுத்திவிட்டு அதற்கேற்ப செல்வதில்லை. உள்ளதை உள்ளபடி உரைக்கிறது .மீதியை வாசகனிடத்தில் விட்டுவிடுகிறது. பிரச்சார நெடி அடித்தால் அந்தப் புதினம் செத்துவிட்டது என்று அர்த்தம்.

புதினம் வாசகர்களுக்கானது. காவியம் தலைவர்களுக்கானது. புதினம் வாசிக்க வைக்கும், காவியம் யோசிக்க வைக்கும்.

ஜேஆர் டேவிட்சன்

Leave a comment

Blog at WordPress.com.

Up ↑