- காவிய நடை (Poetic diction: பொதுவாகக் காப்பியங்கள் பயன்படுத்தும் செய்யுள்/கவிதை நடை உயர்வானவைகளாகவும் உட்சாரம் நிரம்பியவைகளாகவும் தனித்தமிழால் ஆனவைகளாகவும் இருந்தாலும் பொதுவான வாசகர்களுக்கு ஓர் ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது. இருபத்தொன்றாம் நூற்றாண்டில் காவியம் பாட மிகவும் எளிய, உரைநடைக்கு சமமான ஒரு நடையைக் கையாண்டால்தான் நவீன புதினங்கள் கையாளும் கதையைத் தங்கு தடையின்றி கூறமுடியும் என்பதால் உரைநடையை விட சற்றே உயர்ந்த எதுகை மோனை கொண்ட ஓர் உரைகவிதை வடிவம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை வாசகர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
நீலத் திரையில்/[1] வானக் கலைஞன்/ வண்ணச் சித்திரங்கள்
மாலை வானில் வரையும் வேளை! அந்திப்பொன் வெயிலை
மரகதத் தோளில் மலைகள் அணிய மந்திர லோகமென
அருவிகள் கொஞ்சும் குறிஞ்சி மகளும் அழகாய்ச் சிரித்திருக்க
இது இந்தக் காவியம் பயன்படுத்தும் நடை. உரைநடையைவிட சற்றே மேலானதாகவும், பாரதியின் கவிதையைவிட சற்றே கீழானதாகவும் அமையும் சந்த உரைநடை எனலாம். காவியத்தின் ஏழடுக்கு கதைப்பின்னலையும் முற்றுருவக யாப்பையும், தத்துவ உரையாடல்களையும் எளிதில் கொண்டு செல்ல ஏற்ற வடிவமாக இந்தக் காவிய நடையைக் கவிஞர் வரித்துக்கொண்டுள்ளார்.
2. முற்றுருவகம்[2] (Absolute Metaphor)
காவியத்தில் புனையப்படும் உருவக அணிக்கும், உருவகப் பாத்திரங்களுக்கும் அப்பாற்பட்டு காவியமே ஒரு முற்றுருவகமாக அமைக்கப்பட்டுள்ளது. தமிழில் இரட்சணிய யாத்திரீகத்தை இதற்கு இணையாகக் கருதலாம். இந்தக் காப்பிய உருவகம் ஏழடுக்குக் கதைப்பின்னலால் கட்டப்பட்டுள்ளதால் இதனைக் கட்டவிழ்க்கும் பணி சிக்கலான இலக்கிய முடிச்சாகத் திகழும் என்பதே மகாகாவியத்தின் தனித்தன்மை எனலாம். இதற்கு பலநூறு உலக இலக்கியங்களுக்குள் நுழைய வேண்டியிருக்கும். இதற்கான திறவுகோல்கள் உரையாசிரியரின் அடிக்குறிப்புகளிலும் கவிஞரே காட்டும் மேற்கோள்களிலும் அத்தயாயத் தலைப்புகளிலும் புதைந்துகிடக்கும். எத்தனை காலத்துக்குதான் நேர்கோட்டு கதைகளைக் கொண்டே காப்பியங்கள் நடக்கும். ஜே ஜே சில குறிப்புகள், பள்ளிகொண்ட புரம், விஷ்ணுபுரம் போன்ற மாபெரும் நவீன புதினங்கள் இலக்கிய உத்திகள் செறிந்தவையாகும். தமிழ்க் காவியங்களும் புதுமைப் பாதைகளில் வீறுநடை போட வேண்டாமா?
3. எழுகதைப்பின்னல் (Multi-strand plot)
பல்வேறு உலகத் தத்துவங்களின் உரையாடல் களமாக க் காப்பியம் இருப்பதாலும், முழுமையாகக் காப்பியமே ஒரு முற்றுருவகமாக அமைவதாலும் காப்பியக் கதை மிகவும் சாதாரணமான ஒன்றாகவே உள்ளது. ஒரு முனையில் இருந்து புறப்பட்டு மற்றொரு முனையில் முடிவடையும் ஒன்றுக்கொன்று தொடர்பற்றவைகளாகத் தோன்றும் ஆனால் ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைந்த ஏழு தனிக் கதைகள் ஒன்றோடு ஒன்று இணைந்தும் ஒன்றை ஒன்றும் வெட்டியும் செல்வதால் சாதாரண வாசகர்களுக்கு குழப்பம் ஏற்படும் இயல்பானதாக இருந்தாலும் மிகவும் கவனமாக காப்பியம் என்ற இந்தப் பெருங்கானகத்துக்குள் பயணம் செய்பவர்களுக்கு இந்த எழுகதைப் பின்னல் சுவராசியம் அளிப்பதாக அமையும்.
4. ஒரு புதினத்தைப் போல கதையாடல் (A narrative style resembling a novel)
மரபு வழி காவியங்களைப் போலல்லாமல் ஒரு புதினத்தைப் போல வருணனைகளையும், உரையாடல்களையும், கதைநிகழ்வுகளயும் கொண்டு செல்லும் முயற்சி விரிவாக முன்னெடுத்துச் செல்லப்படுகிறது. இதை ஏற்கெனவே புரட்சிக்கவிஞரைப் போன்ற ஒரு சிலர் கையாண்டுள்ளனர். இருந்தாலும் ஒரு சோதனை முயற்சியாக இந்தப் பாணி காவியம் முழுவதிலும் பின்பற்றப்படுகிறது.
5. உலகளாவிய கருத்துகள் (Universal Concepts)
தமிழ் மரபுகளையும் சிந்தனைகளையும் போற்றும் அதே வேளையில் உலகளாவிய கருத்துச் செல்வங்களைக் கொண்டுவந்து காப்பியம் முழுவதிலும் நிறைத்தும் உலகப் புகழ்பெற்ற நூற்களைக் கதையோட்டத்தில் கொண்டுவந்து கோத்தும் உலகமகா இலக்கியங்களின் காவிய உவமைகளை தமிழ்வடிவம் கொடுத்துப் பயன்படுத்தியும் இந்தக் காப்பியம் சில முன்முயற்சிகளை எடுக்கிறது.
6. காப்பிய அட்டவணைகள் (Epic Catalogues)
காப்பிய அட்டவணை என்பது ஐரோப்பிய காப்பிய மரபில் ஓர் அங்கமாகும். தமிழில் சிலப்பதிகாரத்தில் பத்தினிப் பெண்டீர்களின் ஒரு காப்பிய அட்டவணை அளிக்கப்படுகிறது. கம்பன் அணிகலன்களின் பட்டியல் ஒன்றை வழங்குகிறான்.ஆனால் அதைப் பற்றிய விரிவான ஆய்வுகள் கிடைக்கவில்லை. பிற்காலத் தமிழ்க் காப்பியங்களில் காப்பிய அட்டவணைகாப்பிய அங்கமாகப் பாடப்பட்டதாகத் தெரியவில்லை. ஆனால் இந்தக் காப்பியத்தில் ஒன்றல்ல பல காப்பிய அட்டவணைகள் விதந்தோதப் படுகின்றன காப்பியத் தலைவனின் கவச அணிகலன்கள், காப்பியத் தலைவியின், அலங்கார அணிகள், தமிழ்நூல்கள், கோட்டைகள், கோட்டைக் கருவிகள், காவலூர்த் தளபதிகள், கரும்படைத் தளபதிகள், இளவரசி இன்மொழியின் பதினான்கு தோழிகள் என அட்டவணைகள் முக்கியத்துவம் கொடுத்து ஐரோப்பிய காப்பிய மரபுகளின்படி பாடப்படுகின்றன.
7. தன்னிகரற்ற காப்பியத்தலைவன் (Matchless Epic Hero)
சிலப்பதிகாரத்தில் காப்பியத் தலைவன் கோவலன்தான். பிற்கூற்றாக அவனது அருஞ்செயல்கள் கூறப்பட்டாலும் அவனைத் தன்னிகரற்ற காப்பியத் தலைவனாகக் கூறமுடியாது. சீவகன் சிறந்த காப்பியத் தலைவனாக உருவாக்கப்படுகிறான். ஆனால் கம்பனின் இராமன் கவிஞனின் கைத்திறத்தால் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத தன்னிகரற்ற தலைவனாக மிளிர்கிறான். கம்பராமாயணத்தில் எதிர்த்தலைவனாக இருந்த இராவணன் கம்பனாலேயே மிகச்சிறப்பாக சித்தரிக்கப்பட்டுவிட்டான். மிக்குயர்ந்த கவித்திறம் பெற்றிருந்தாலும் புலவர்குழந்தையால் இராவணனுக்கு இராவண காவியத்தில் ஒரு தன்னிகரற்ற தலைவனாகப் பதவிஉயர்வு அளிக்கமுடியவில்லை. பின்னர் பாடப்பட்ட தமிழ்க் காவியங்களில் போற்றும்படியான காப்பியத்தலைவன் எவனும் புகழ்பெறவில்லை. ஆனால் எடுப்பில் இருந்தே இந்தக் காவியத்தில் காவலூர்ப் படைத்தலைவனான வீரநம்பி ஒப்பாரும் மிக்காருமற்ற காவியத் தலைவனாக உருவாக்கப்படுகிறான். தனிப்போரில் தன்னிகரற்ற வீரனாகவும் போர்க்களத்தில் ஈடு இணையற்ற படைத்தலைவனாகவும் காட்டப்படுகிறான். தனியொரு நபராகப் புறப்பட்டுச் சென்று பல இலக்கம் வீரர்களைக் கொண்ட காவலூர்ப் பெரும்படையைக் கட்டமைக்கிறான். மலைக்கோட்டை இறுதிப்போரில் மகாகொடியவனும் விற்போரில் அர்ச்சுனனுக்கு இணையானவனுமான கரும்படையின் தளபதியையும் அவனது ஐந்திலக்கம் வீரர்கள் கொண்ட பெரும் படையையும் முறியடித்து வெற்றிவாகை சூடுகிறான். காவலூர் சமத்துவப் பேரரசை நிர்மாணித்து ஒரு சமதர்ம பொதுவுடைமை ஆட்சியை நிறுவுகிறான். பொற்கோட்டையில் சிறைப்படிருந்த காப்பிய நாயகியான இளவரசி வசனாவை விடுவிக்கிறான். ஒரு பெரும்படையே பேர்கேட்டு நடுங்கும் மாமிச மலையும் வாட்போர் வல்லவனுமான அரக்கனான அகம்பாவனை தனிப்போரில் தன் அறிவுநுட்பத்தாலும் வாட்போர் திறனாலும் இமைக்குமுன் கொன்றழிக்கிறான். விளிம்பாரூர் இளவரசியைத் தாக்க வரும் யானையைத் தனிநின்று வீழ்த்துகிறான். அவளைக் கொல்லவரும் முரடர் படையை துவம்சம் செய்கிறான். இப்படி காவியம் முழுவதும் சாகசம் புரியும் தன்னிகரற்ற வீரநம்பியின் காப்பியப்படைப்பு தற்காலத்தில் எழுதப்பட்ட பெருங்காப்பியங்களில் இல்லாத தனிப்படைப்பாகும். எல்லாவற்றிற்கும் மேலாக எழுமாட கட்டமைப்புகொண்ட காப்பியத்தின் நாயகனான வீரநம்பியும் ஏழுவிழுமியத் தலைவர்களின் உருவகமாகத் திகழ்வது கட்டவிழும்போது அவன் உண்மையிலேயே தன்னிகரற்ற தலைவனாக போற்றப்படுவது உறுதி.
8. நிகழ்காலத்தின் நிழலுரு (Shadow of the Present)
உலவும் மாந்தர்களும் உருவாகும் நிகழ்வுகளும் ஒரு வரலாற்று பிம்பத்தைக் கட்டுவதுபோல் தோன்றினாலும் பாத்திரங்களும் பாடுபொருளும் இன்றைய அதிநவீன உலகத்துக்குள் உருளும் பிரச்சினைகளையே பிரதிபலிக்கின்றன. ஆதி முதலாக மனிதன் இயற்கையின் விதிகளையும் ஒழுங்குமுறைகளையும் மீறிக்கொண்டுதான் வருகிறான். இந்த மீறலை வேதாகமம் பாவம் என்று பெயரிடுகிறது. பெருமை, கோபம், பொறாமை, ஒழுக்கமின்மை, பெருந்தீனி, சோம்பல், பேராசை என்ற ஏழு பெரும் பாவங்களே (பில்லிகிரகாம்) முதலில் இருந்தே மானிட சமூகத்தின் துயர்களுக்கு அடிப்படைக் காரணம் என்பதை வேதாகமம் மட்டுமல்லாமல் திருவள்ளுவர் போன்ற அறிவின் எல்லையைத் தொட்ட சிந்தனைச் சிகரங்களும் வலியுறுத்திச் செல்கின்றனர். இந்த ஏழு இயற்கை மீறல்களை உருவகப் பாத்திரங்களாக்கும் இந்தக் காவியம் மனித குலத்தைத் தொன்றுதொட்டும் இன்றளவும் ஆட்டிப்படைக்கும் உலகளாவிய உண்மையைப் பற்றிய உரையாடலை நடத்துகிறது. உலகளாவிய உடல்நலம், பருவநிலை சுற்றுச்சூழல் சீர்கெடு, அணுவாயுத ஊடுருவல், உலகளாவிய நிதியியல் நிலையிழப்பு, மனிதாபிமானத்தின் வீழ்ச்சி மகாகொடிய வறுமை, கல்வி வாய்ப்புக்கு எதிரான தடை, நிதி சமத்துவமின்மையும் வரி ஏய்ப்புப் புகலிடமும் என்ற உலகின் உதிரத்தை உறிஞ்சும் ஏழு நவீன மகா பாதகங்களைப் பற்றியும் பாத்திரங்கள் வாயிலாக இந்தப் பெருங்காப்பியம் பேருரையாடல்களை நிகழ்த்துகிறது. இன்றைய தமிழ்ச் சமுதாயத்தை மண்ணில் தள்ளி மிதித்துத் தேய்க்கும் சாதியக் கொடுமை, பேயெனப் பற்றிய சுயநலம், அறிவு நாட்டமின்றி உணர்ச்சியைச் சார்ந்தொழுகும் கேவலமான வாழ்க்கை, மதப்போர்வையை மூடி திரியும் புரட்டு, அடிமை வெறி, பதவி மோகம், அரசியல்கீழ்மை ஆகிய சதுப்பில் மூழ்கி தாய்மொழிப் பற்றற்று சடலங்களைப் போல் வாழ்வோரை காவியம் தன் கவிதைச் சாட்டையால் கண்மூடித் தனமாகத் தாக்குகிறது. ஆகவே இந்தக் காப்பியத்தை சரித்திரக் களத்தில் நின்று சமூக அநீதிகளின் மேல் போர் தொடுக்கும் நிகழ்காலத்தின் நிழலுரு எனலாம்.
9. காப்பிய உவமைகளின் களஞ்சியம் (A Treasury of Epic Similes)
காவிய இலக்கியமாகவும், காப்பிய இலக்கணமாகவும் திகழும் கம்பன், ஹோமர், மில்ட்டன் போன்ற மகோன்னத காப்பியக் கவிஞர்களின் அடியொற்றி ஒன்றல்ல நூற்றுக்கணக்கான காப்பிய உவமைகளைக் கல்லில் சிலைபோல கவனத்துடன் செதுக்குகிறார் கவிஞர். இது பற்றிய ஒரு பெரும் நூல் வர வாய்ப்புள்ளது. எடுத்துக்காட்டாக முதற்காண்டத்தின் முதல் அத்தியாயத்திலேயே ஓவியமாக்கப்படும் ஒரு காப்பிய உவமையையும் உரையாசிரியரின் விளக்கத்துடன் பார்க்கலாம்:
ஒவ்வொரு நாளின் முடிவும் புதிய விடியலுக்கான வாக்குறுதி!
எவ்வித வீழ்ச்சியும் எழுச்சியின் வித்தெனல் வீழும்கதிரின் உறுதிமொழி!
சிறகுகள் விரித்து வருங்கழு காக இரவுப்பறவை மிதந்துவரும்!
உறக்க தேவதை இமைகளைத் தேடி அங்குமிங்கும் அலைமோதும்!
ஒளிவாழ்க் கைக்காய் ஓடி உழைக்கும் கதிரவன் மறைய நல்மனையாள்
விழிநீர் மின்ன மதிமுகம் வெளுக்கக் காலைவரையினி காத்திருப்பாள்!
இரவுகள் இரும்புச் சிறகுகள் கொண்டு வருவதுமுண்டு சிலகாலம்!
கருவில் அழியும் குழந்தைக ளோடு மக்கள்கூட்டமே கண்மூடும்!
இருதயம் அற்றோர் அறிவுச் சிதைவெனும் அந்தகார மண்மூடும்!
கருஞ்செயல் புரிவோர்க் குதவிடும் வண்ணம் இரவுஎன்ற திரைவீழும்!
இருள்நிறப் போர்வையை இழுத்து மூட மலைமகன் துடிப்பதைக் கண்டதனால்
மருளும் வான்மகள் கன்னம் சிவக்கும் குறிப்பை உணர்ந்து நாணத்தால்!
விடைபெறும் நிகழ்வும் இத்தனை எழிலா மயக்கும்மாலைப் பொழுதினிலே!
கடைக்கண் ஒழுகும் விண்மீன் துளிகள் சிந்தி மறைந்தாள் மணப்பெண்ணும்!
காலையில் கக்கிய செம்மணி முத்தை மாலை விழுங்கும் கருநாகம்!
நூலை அழித்த மூடத்தனம் போல் மூடுமிருள்நீர் நெருப்பாகும்! (முதற்காண்டம் முதல் அத்தியாயம் வரிகள் 7-22)
(உரை) இந்தக் காப்பியத்தில் எண்ணற்ற காப்பிய உவமைகள் காணப்படுகின்றன. இதுவே முதல் காப்பிய உவமை. காப்பியத்தில் வருவதால் இவை காப்பிய உவமைகள் அல்ல. இந்த உவமைகள் காப்பியத்தின் மையக்கருத்தை வலியுறுத்துவதாகவும் காப்பியப் போக்கையும் நோக்கத்தையும் வெளிப்படுத்துபவையாகவும் அமையும். இவை பல அடிகள் பரந்து பாயும். ஒரு பொருளைக் குறித்துப் பல உவமைகள் கொத்துவமைகளாக இருக்கும். வரலாற்று நிகழ்வுகளும் இணைந்திருக்கும். இவற்றை ஓர் அலகாகக் கொண்டு பார்க்கவேண்டும். ஓமரின் காப்பிய உவமைகளும், மில்ட்டனின் காப்பிய உவமைகளும் கம்பனின் காப்பிய உவமைகளும் வெவ்வேறு அமைப்புவகையைச் சார்ந்தவையாகும். இந்தக் காவியத்தில் கவிஞர் பெரும்பாலும் மில்ட்டனின் பாணியைக் கையாளுகிறார். இந்த முதல் காப்பிய உவமை 16 வரிகள் நீண்டு விரிகின்றன. இங்கு பொருள் (உவமேயம்) அந்தி சாயும் நேரம் ஆகும். இதைப் பல்வேறு உவமைகளைக் (உவமானம்) கொண்டு விளக்குகிறார். இரவு ஒரு பெரும் பறவையைப் போல் தன் சிறகுகளை விரித்து வருகிறது. அதன் கரும் நிழல் கீழே விழத் தொடங்கிவிட்டது. இரவு தேவதை உறக்க இமைகளைத் தேடி வருவதாக அடுத்து கூறுகிறார். வாழ்க்கை ஒளிமயமாகத் திகழப் பாடுபடும் கதிரவக் கணவன் இரவு வேலைக்கு செல்லப் போகிறான். அவனை வழியனுப்பும் மனைவியாகிய மதியின் முகம் பிரிவை எண்ணி வெளுத்துவிட்டது. அவள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஆங்காங்கே விண்மீன்களாக சிந்தத்தொடங்கிவிட்டன. போகப்போக துளிகள் அதிகமாகும். காலை வரும் வரை அவள் அழுதுகொண்டிருப்பாள். சில சமயங்களில் இரவுகள் இரும்புச் சிறகணிந்து வருமாம். அப்படி வந்த ஓர் இரவில் குழந்தைகள் கருவில் அழிந்து மக்கள் கூட்டம் கூட்டமாக மாண்டனர். இப்படி இருதயம் அற்றவர்களின் அட்டூழியங்களுக்கு இரவு, திரையாய் நின்று துணை புரியுமாம். இவ்வாறு போரின் கொடும் நினைவை இந்தக் காப்பியும் கோடிட்டுக்காட்டுகிறது (ஹிரோஷிமா நாகசாகி). அடுத்து ஓர் உவமை. மயக்கும் மாலைப் பொழுது வந்துவிட்டது. மலைமகனுக்கு அவசரம். வானழகியை அணைத்துக்கொண்டு இருள்போர்வையை இழுத்து மூட முனைகிறான். ஆனால் இன்னும் வெளிச்சம் இருக்கிறது. கணவனின் குறிப்பை அறிந்த வான்மகள் முகம் நாணத்தால் சிவக்கிறது. அடுத்ததும் ஒரு குடும்ப நாடகம். திருமணம் முடிந்து நிலவுப் பெண் கணவன் வீட்டுக்குப் போகப்போகிறாள். சோகத்தால் அவள் முகம் களையிழந்து போகிறது. கண்ணீர்த் துளிகளாம் விண்மீன்கள் விழத்தொடங்கிவிட்டன. தன் துக்கத்தை வெளிக்காட்டாமல் முகத்தை மேகச் சேலைக்குள் மறைத்துக்கொள்கிறாள். அடுத்து ஓர் உவமையைக் கொண்டு வருகிறார். மறையும் தருவாயில் சிவப்பு மணிபோல மேலை வானில் நிற்கிறது சூரியன். அது வேறு எதுவும் இல்லை விடிகாலையில் இரவு என்ற கருநாகம் தன் நாகமணியை உமிழ்ந்துவைத்துவிட்டுச் சென்று அதை மீண்டும் எடுத்து விழுங்க வருகிறதாம். இப்படி மக்கள் நாவில் வழங்கும் ஒரு கட்டுக் கதையையும் இந்தக் காப்பிய உவமை தன்வயமாக்கி வைத்துள்ளது. அதுமட்டும் அல்லாமல் இரவை மூடத்தனம் என்றும் வருணிக்கிறார். இந்த மூட நம்பிக்கைதான் அரிய பெரிய தமிழ் ஓலைச் சுவடிகளை நீராகவும் நெருப்பாகவும் அழித்தொழித்துவிட்டது என்ற அவலத்தையும் காப்பிய உவமை எடுத்தியம்புகிறது. இப்படி பல்வேறு உவமைகளை உள்ளடக்கிய ஓர் உவமைத் தொகுதியாக இக்கவிஞருடைய காப்பிய உவமைகள் அடுக்கடுக்காக இன்பத்தை அள்ளி வீசுகின்றன.
10. வரலாற்றுப் புதையல்களாகக் கவிதைவரிகள் (Poetic lines as historical treasures)
வரிக்கு வரி வரலாற்றுப் புதையல்களாக காவிய வரிகள் வார்த்தெடுக்கப்படுகின்றன. காவியத்தின் முதல் அத்தியாயமே காவிய நாயகனை அறிமுகப்படுத்திவிடுகிறது. அழகும் ஆண்மையும் வீரமும் நிறைந்த படைத்தளபதியான வீரநம்பி அடர் கானகமாம் காவியக் களத்துக்குள் நுழையும்போதே அவனது கண்ணில் படுகிறது ஒரு சீரழ்ந்த குடில். இந்தக் குடில் என்னும் படிமத்துக்குள் தமிழையும் தமிழ்ச்சமூகத்தையும் சித்திரமாக்குகிறார் கவிஞர்:
பார்வை வலையைப் பலதிசை வீசிய வீரனிறுதியில் ஒருகரையில்
சீரெழில் குலைந்த சிறுகுடில் ஒன்றைக் கண்டுநொடியில் அதையடைந்தான்!
அருகில் வந்ததும் அவனதைக் கண்டு பிரம்மித்தான்!
வறுமை யுற்றவர் வாழும் குடிலல வனப்போடு
அரச குலத்தவர் பொழுது போக்கிட வனத்துக்குள்
ஒருகா லத்தில் வடிவமைத் திட்ட எழிற்குடிலே!
ஆயிரம் கனவுப் பூக்களைச் சுமந்து
ஆரவாரப் பந்தலில் நுழைந்து
பாயிரம் படித்துப் பரவசம் அடைந்து
பாடிக் களித்தப் பகலில் ஒருநாள்
கோலச் சிறகைக் காலம் வெட்ட
கையறு நிலைகொளும் கைம்பெண் போலவும்
பாலை நிலத்தில் வாடிய சினையாய்
வறியவன் கொண்ட இளமையைப் போலவும்
வேற்படை கடந்து வெறியாடி விட்டதால்
பாழாய்க் கிடக்கும் கிராமத்தைப் போலவும்
நூற்படை இழந்தயாழ் நூலகம் போலவும்
வாழ்ந்து கெட்டவர் வாழ்வைப் போலவும்
ஆழிப் பேரலை அள்ளிச் சென்றதால்
அரவம் அடங்கிய தென்னகம் போலவும்
வாழிடம் எனும்நிலை இழந்த பெருங்குடில்
சிதைந்து கிடப்பதைக் கண்டான் வீரன்! (முதற்காண்டம், முதல் அத்தியாயம் வரிகள்: 33-47)
இயற்கையின் வனப்பையும், மாலைப் பொழுதின் மயக்கும் எழிலையும் அறிமுகப்படுத்தி அதன் பின் காப்பியத் தலைவனைக் கவிஞர் அறிமுகப்படுத்துகிறார். கூடவே ஒரு சிதைந்த குடிலையும் காட்டுகிறார். இந்தக் குடிலைப் பற்றி 8 வரிகள் வருணிக்கின்றன. இந்தக் குடில் ஓர் உருவகப் படிமம் மட்டும் அல்லாமல் காப்பியத்தின் ஒரு பாத்திரமாகவும் பங்கு வகிக்கிறது. ஆரவாரத்தோடு மணவிழா கண்டு ஒரு பகல் பொழுதில் கோலச் சிறகு வெட்டப்பட்டு வாழ்விழந்த ஒரு கைம்பெண் போல இப்போது இருக்கிறது அந்தப் பாழடைந்த குடில். ஒரு காலத்தில் அரச குலத்தவர்கள் தங்கி இன்புறும் ஓய்வு விடுதியாக இருந்திருக்கும் எனத் தெரிகிறது. குடிலின் பண்டைய சிறப்பும் இன்றைய சிதைவும் சுட்டிக்காட்டப் படுகின்றன. படை வெறியாட்டம் ஆடிய கிராமம், எரியுண்ட யாழ்நூலகம், இளமையில் வறுமை, சுனாமி தாக்கிய தென் தமிழகம் என்ற பல ஒப்பீடுகள் இந்த உவமையின் உள்ளுறைபவைகளை வெளிக்கொணர்கின்றன. தமிழர்கள், தமிழ் நாகரிகம், இலங்கையும் இலங்கைத் தமிழர்களும் பொதுவாக தாய்த்தமிழக மக்கள் உலகத் தழிழர்கள் என்ற பல நிலை ஒப்பீட்டை இந்தக் காப்பிய உவமை தன்னகத்தே கொண்டுள்ளது. மக்கள், நாடு, இனம், நாகரிகம், மொழி, அரசுரிமை என்ற பலநிலைகளில் தமிழனத்தின் வீழ்சியை இந்தக் குடில் குறியீடு உணர்த்துகிறது எனலாம்.
11. நூலகமாகக் காவியம் (An Epic as a Library)
இந்தக் காவியத்தின் இன்னொரு சிறப்பு என்னவென்றால் உருவகச் சிறப்புக்கு ஊட்டம் அளிப்பதற்காகவும், கதைக்கு வலு சேர்ப்பதற்காகவும் பல நூறு நூல்களை முழுமையாக உள்ளடக்கியுள்ளது இந்தக் காவியம். எடுத்துக்காட்டாக ஒன்றைப் பார்க்கலாம்: சீர் எழில் குலைந்த சிறு குடில் – இது ஒரு காலத்தில் எழிலான குடிலாக இருந்தது என்ற ஒரு குறிப்பை இந்தச் சொற்றொடர் வெளிப்படுத்துகிறது. இந்த உருவகக் காப்பியத்தில் தொட்ட இடம் எல்லாம் உருவகங்கள் புதைந்திருக்கக் கூடும் என்ற எதிர்பார்ப்போடேயே நாம் நம் பயணத்தை முன்னெடுக்க வேண்டும். “எழில் குடில்” என்பது எதையோ நமக்கு உணர்த்த வருவதுபோல் இருக்கிறது. ஒருவேளை “எழில் குடில்” (The Enchanted Cottage) என்ற அற்புதமான காதல் கதையின் மூலம் இங்கு பின் வரும் தன் காவிய நிகழ்வை கவிஞர் முன்குறித்து செல்கிறாரோ? எழிலும் எளிமையும் வாய்ந்த தென்னில வாழ்வு சிதைந்து போனதை இந்த உருவகம் குறிக்கிறதா? எழில் குடில் திரைக் காவியத்தில் காதலே அழகைத் தீர்மானிப்பது போல பின்னர் இக்காவியத்திலும் காதலே அழகை வரையறுப்பதைக் காணும்போது இக்காவியத்தின் உருவகச் செறிவு எங்கெங்கும் புதைந்து கிடப்பதைக் கண்டு மகிழாமல் இருக்க முடியவில்லை. இது போன்று காவியத்தின் பல்வேறு இடங்களில் இந்தக் கதையின் பாடுபொருளுக்கு ஆழத்தையும் அகலத்தையும் கூட்டி காப்பியக் கதையின் போக்கை முன்னறிவிக்கும் பல் நூல்கள் எடுத்தாளப்படுவதைக் கண்டுகளிக்க முடிகிறது.
12. எழுநிலை மாடம் (Seven storied structure)
வேதாகமம் கருத்துகளை விளக்க ஓர் எழுநிலை மாடம் போன்ற கட்டமைப்பைப் பயன்படுத்துகிறது. கடவுளின் சொற்கள் தூய்மையானவை; அவை மண்ணாலான உலையிலே புடமிடப்பட்டு, ஏழு முறை தூய்மையாக்கப்பட்ட வெள்ளிக்கு ஒப்பானவை (சங்கீதம் 12.6) என்று இதை வேதாகமம் விளக்குகிறது. ஒரு கருத்து அல்லது பாத்திரம் அல்லது உருவகம் ஏழு நிலைகளைக் கடந்து அதன் சிகரத்தை எட்டுகிறது என்பதைக் காவியத்தின் போக்கில் காணலாம். எடுத்துக்காட்டாக இந்தக் காவியத்தின் நாயகன் ஒரு சாதாரணப் போர்விரனாக இருந்து, ஆயிரம் பேர்கொண்ட படைக்குப் பொறுப்பேற்று, சாகச வீரனாகி, புரட்சியாளனாகி, சமத்துவ சமூகத்தை உருவாக்கும் சிந்தனையாளனாகி, ஓர் ஊரின் விடுதலை நாயகனாகி, ஒரு பேரரசைக்கட்டுகிறவனாக மாறுகிறான். இப்படிப் பாத்திரங்கள் ஒவ்வொன்றும் பல நிலைகளைக் கடந்து உன்னத நிலையைத் தொடுகின்றன. ஏழுநிலைகளைக் கடந்து மானிட அன்பு மகத்தான தெய்வீக அன்பாக மாறுவதையும், தனி மனித வீரம் அனைத்தையும் தழுவிய சமூக வீரமாக மாறுவதையும், காசுக்காக வந்தவன் காதலுக்காக நிற்பதையும், மருந்தைத் தேடி வருபவன் மாற்றத்தை நிலை நாட்டுவதுமான விதை விண்ணைத்தொடும் மரமாக மாறும் ரசவாதத்தை பாத்திரப் படைப்பிலும் கருத்தின் வளர்ச்சியிலும், கதையின் போக்கிலும் நடத்தி காவியம் மண்குகை வழியாகக் கடந்து தூய வெள்ளியைப் போல் மாறி வெளிச்சம் பாய்ச்சுவதைக் காண முடிகிறது.
உணர்வோடு அறிவைக் கலந்து உள்ளத் தூய்மையோடு காவியத்துக்குள் நுழைபவர்களுக்கு இது போன்ற எண்ணற்ற கருத்துக் கருவூலங்களை வழங்கி கன்னித் தமிழின் காலடிகளில் காலத்திற்கு ஏற்ற கொடையைச் சமர்ப்பிப்பதற்காக மகாகாவியம் தன் மகத்தான பயணத்தைத் தொடங்கிவிட்டது. எல்லா புகழும் தமிழுக்கே!
[1] கவிதையை எங்கு நிறுத்தி சந்தத்தொடு வாசிக்க வேண்டும் என்பதை உணர்த்த இந்தக் கோடுகள் ‘/’ உதாரணமாகப் பயன்படுத்திக் காட்டப்பட்டுள்ளன.
[2] முதன்மைப் பொருளான காப்பியக் கதையும் அதனுடன் தொடர்புடைய அனைத்துப் பண்புகளும், உறுப்புகளும் முழுமையாக உருவகங்களாக மாற்றப்படும் ஒரு சொல்லணியை முற்றுருவகம் என்ற சொல்லாடல் குறிக்கிறது. முழு காப்பியக் கதையின் அளவில் ஒப்பீடு அமைகிறதா அல்லது காப்பியப் பாத்திரங்கள், காப்பியநிகழ்வுகள் அளவில் அமைகிறதா என்பதைப் பொருத்து இதனை முற்றுருவகம் (Absolute Metaphor) என்றும் விரிவுருவகம் (Extended Metaphor) என்றும் வகைப்படுத்தலாம். ஏகதேச உருவகத்தில் இருந்து இது வேறுபட்டது. காப்பியப் போக்கில் இந்த முற்றுருவக அமைப்பு விளக்கி உரைக்கப்படும்.
Leave a Reply